கருப்பு பணத்தை பாதுகாக்க உதவினால் கடும் நடவடிக்கை பிரதமர் எச்சரிக்கை
கருப்பு பணத்தை பாதுகாக்க உதவினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்தார்.
புதுடெல்லி,
கருப்பு பணத்தை பாதுகாக்க உதவினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்தார்.
டெல்லியில் நேற்று நடந்த இந்திய பட்டய கணக்காயர் நிறுவனத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசியதாவது:–
வரி ஏய்ப்பில் ஈடுபடும் கம்பெனிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பண மதிப்பு நீக்க நடவடிக்கையின்போது, நாட்டில் பதிவு செய்யப்பட்ட 3 லட்சத்துக்கும் அதிகமான கம்பெனிகள் போலியானவையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.இதில் ஒரே கட்ட நடவடிக்கையின் கீழ் 1 லட்சத்துக்கும் மேலான போலி கம்பெனிகளின் பதிவை மத்திய அரசு ரத்து செய்து விட்டது. இந்த நடவடிக்கை சரக்கு, சேவை வரி விதிப்பு நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக எடுக்கப்பட்டது.
மேலும் 37 ஆயிரம் போலி கம்பெனிகள் அடையாளம் காணப்பட்டு இருக்கிறது. அவற்றின் மீதும் நடவடிக்கை பாயும். அந்த கம்பெனிகளின் நாட்களும் எண்ணப்பட்டு வருகின்றன.
பட்டய கணக்காயர்கள் வரி செலுத்துவோரை வரி வளையத்துக்குள் கொண்டு வருவதற்கு உறுதி ஏற்கவேண்டும். தங்களது வாடிக்கையாளர்களை வரி செலுத்துவதில் இருந்து தப்பிக்க ஊக்கம் அளிக்க கூடாது.தூய்மையான இந்தியாவை உருவாக்க நடவடிக்கை எடுத்து வரும் எனது அரசு, இந்தியாவின் பொருளாதாரத்தையும் தூய்மைப்படுத்திடவும் விரும்புகிறது. எனவே நாட்டை சூறையாடியவர்கள் மீது மிகவும் கடுமையான நிலைப்பாட்டை மத்திய அரசு எடுக்கும். இதில் அரசியல் ரீதியாக ஏற்படும் தாக்கங்களை பற்றி எல்லாம் எனக்கு எந்த கவலையும் இல்லை.
முறைகேட்டில் ஈடுபட்டதாக 1,400 பட்டய கணக்காயர்கள் மீது வழக்குகள் உள்ளன. இவை பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்கின்றன. ஆனால் முறைகேட்டில் ஈடுபட்டதாக வெறும் 25 பேர் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. இது ஏன் என்று தெரியவில்லை.
நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 32 லட்சம் இந்தியர்கள்தான் 10 லட்ச ரூபாய் வருமானம் ஈட்டுவதாக கணக்கு காட்டுகின்றனர் என்பது கசப்பான உண்மையாக உள்ளது. ஆனாலும் பல கோடி பேர் தங்களுடைய தொழில் மூலம் இதைவிட அதிகம் சம்பாதிக்கின்றனர்.கருப்பு பணத்தை பாதுகாக்க உதவினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கருப்பு பணம் வைத்திருப்பதை பட்டய கணக்காயர்கள் அறிந்தால், அவர்களை நீங்கள் எச்சரிக்கவேண்டும். அவர்களை விட்டு வைக்க கூடாது.
மத்திய அரசு எடுத்த நடவடிக்கையின் காரணமாகத்தான் சுவிஸ் வங்கிகளில் பதுக்கப்பட்ட கருப்பு பணத்தின் அளவு தற்போது கணிசமாக குறைந்துவிட்டது. ஆனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இருந்தபோது 2013–ல் இந்த தொகை பல மடங்காக இருந்தது.தற்போது மத்திய அரசு சுவிட்சர்லாந்து அரசாங்கத்துடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி இன்னும் 2 ஆண்டுகளில் கருப்பு பணம் வைத்திருப்போர் பற்றிய தகவல்கள் தானாக பரிமாற்றம் செய்து கொள்ளப்படும். இதனால் கருப்பு பணம் பதுக்குவோர் இன்னும் கடினமான நிலையை எதிர்கொள்ள வேண்டியது இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.