நாங்களும் 1962- ஆம் ஆண்டில் இருந்ததைப்போல தற்போது இல்லை : அருண் ஜெட்லிக்கு சீனா பதில்


நாங்களும் 1962- ஆம் ஆண்டில் இருந்ததைப்போல தற்போது இல்லை : அருண் ஜெட்லிக்கு சீனா பதில்
x
தினத்தந்தி 3 July 2017 5:13 PM IST (Updated: 3 July 2017 5:13 PM IST)
t-max-icont-min-icon

நாங்களும் 1962- ஆம் ஆண்டில் இருந்ததைப்போல தற்போது இல்லை என்று அருண் ஜெட்லி கருத்து குறித்து சீனா பதில் கூறியுள்ளது.

பெய்ஜிங்,

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லைத்தகராறு இருந்து வருகிறது. சமீப காலமாக சிக்கிம் பகுதியில் அசல் கட்டுப்பாட்டுக்கோட்டை தாண்டுவதாக சீன துருப்புகள் மீது இந்தியாவும், இந்திய வீரர்கள் மீது சீனாவும் குற்றம் சாட்டி வருகின்றன. மேலும், கைலாஷ், மானசரோவர் யாத்திரை மேற்கொண்ட இந்திய ஆன்மிக பயணிகள் திபெத்தின் நாது லா பாஸ் வழியாக செல்ல சீனா தடை விதித்துள்ளது. இதன் காரணமாக இந்திய, சீன எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இரு நாட்டு படைகளும் எல்லையில் படைகளை குவித்துள்ளதால், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பதட்டம் அதிகரித்துள்ளது.

சீன ராணுவ செய்திதொடர்பாளர் ஒருவர் பீஜிங்கில் அளித்த பேட்டியில், 1962-ம் ஆண்டு இரு நாடுகள் இடையே போர் நடந்ததை சுட்டிக்காட்டி, “இந்திய ராணுவம் வரலாற்றில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று கூறினார். இதற்கு பதிலடி கொடுத்த மத்திய நிதி, ராணுவ மந்திரி அருண் ஜெட்லி, “அவர்கள் நமக்கு நினைவூட்ட விரும்பினால், அவர்களுக்கு சொல்லிக்கொள்வேன்; 1962-ல் இருந்த அன்றைய இந்தியாவின் நிலையும், இன்றைய 2017-ம் ஆண்டின் இந்தியாவின் நிலையும் வேறானவை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்” என பேசி இருந்தார். 

இந்த நிலையில், அருண் ஜெட்லிக்கு பதிலளிக்கும்  வகையில் பேசிய சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறியிருப்பதாவது;- “சீனாவின் நிலையும் தற்போது மாறியிருக்கிறது. தனது பிராந்தியத்தின் இறையாண்மையை காக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் சீனா எடுக்கும். 1890 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை  பின்பற்றி சீன பகுதிக்குள் இருந்து உடனடியாக இந்தியா தனது படைகளை திரும்ப பெறவேண்டும்” என தெரிவித்து உள்ளார்.


Next Story