காவிரி நீர் பிரச்சினை: கோர்ட்டு உத்தரவின்படி கர்நாடகம் தண்ணீர் திறந்து விடவில்லை சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு முறையீடு
கோர்ட்டு உத்தரவின் படி கர்நாடகம் காவிரியில் தண்ணீர் திறந்துவிடவில்லை என்று தமிழக அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று முறையீடு செய்யப்பட்டது.
புதுடெல்லி,
கோர்ட்டு உத்தரவின் படி கர்நாடகம் காவிரியில் தண்ணீர் திறந்துவிடவில்லை என்று தமிழக அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று முறையீடு செய்யப்பட்டது.
குற்றச்சாட்டுகர்நாடகம் வினாடிக்கு 2,000 கன அடி வீதம் தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடவேண்டும் என்று கடந்த அக்டோபர் 30–ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் அதன்படி கர்நாடகம் தண்ணீர் திறந்துவிடவில்லை.
கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மதிக்காமல் நடந்துகொள்கிறது என்றும், தமிழகத்துக்கு உரிய நீரை திறந்து விட மறுக்கிறது என்றும் தொடர்ச்சியாக தமிழக அரசு குற்றம் சாட்டி வருகிறது.
தமிழக அரசு முறையீடுஇந்த நிலையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு தமிழக அரசின் சார்பில் வக்கீல் ஜி.உமாபதி ஆஜர் ஆனார்.
அப்போது அவர், ‘‘சுப்ரீம் கோர்ட்டு இதுவரை பிறப்பித்துள்ள பல்வேறு உத்தரவுகளின் அடிப்படையில் மொத்தமாக கர்நாடக அரசு தமிழகத்துக்கு 22.5 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விட்டிருக்க வேண்டும். ஆனால் இதுவரை 16.5 டி.எம்.சி தண்ணீரை மட்டுமே திறந்து விட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை கர்நாடக அரசு மீண்டும் மீண்டும் மீறி வருகிறது. இதனால் தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதிகளில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே, இது தொடர்பாக தமிழக அரசு முறையாக மனு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும்’’ என்று முறையிட்டார்.
மனு தாக்கல் செய்ய உத்தரவுஇதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அனைத்து புள்ளிவிவரங்களுடன் தமிழக அரசு முறையான மனுவை கோர்ட்டில் தாக்கல் செய்தால் அது விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.