பிரதமர் மோடியை விமர்சித்து மீம்ஸ், மும்பையை சேர்ந்த தன்மயி பட் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு
பிரதமர் மோடியை விமர்சித்து மீம்ஸ் வெளியிட்ட மும்பையை சேர்ந்த ஏஐபி என்ற சமூக வலைதள பக்கத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மும்பை,
சமூக வலைதளங்களில் நையாண்டி செய்து மீம்ஸ்களை வெளியிடுவதில் மும்பையில் ஏஐபி என்ற பெயரில் இயங்கி வரும் குழு மிகவும் பிரபலமானதாகும். இந்த குழுவினர், கடந்த 2015 ஆம் ஆண்டு நடிகர்கள் ரன்வீர் சிங் மற்றும் அர்ஜூன் கபூரை மிகவும் இழிவாக விமர்சித்து வெளியிட்ட வீடியோ பெரும் சர்ச்சைக்குள்ளானது. இதையடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த சம்பவம் 2015 ஆம் ஆண்டு அதிகம் பேசப்பட்டது. அதேபோல், சச்சின் தெண்டுல்கர் மற்றும் லதா மங்கேஷரை கேலி செய்து இதே குழுவினர் கடந்த ஆண்டு ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டனர். இந்த வீடியோவும் கடும் விமர்சனங்களை எழுப்பியது.
இந்த நிலையில், பிரதமர் மோடியை விமர்சித்து டுவிட்டரில் வெளியிட்ட ஒரு புகைப்படத்தால் இந்த குழுவினர் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளனர். உருவத்தில் பிரதமர் மோடியைப்போன்ற தோற்றத்தை கொண்ட ஒருவர் பேக்குடன் ரயில்வே நிலையத்தில், ரயிலுக்கு காத்திருப்பது போலவும் கையில் மொபைல் போனை இயக்குவது போன்ற ஒரு புகைப்படம் வெளியானது. இந்த படத்திற்கு கீழே பயண விரும்பி என்ற வாசகமும் இடம் பெற்று இருந்தது. சர்ச்சைக்குரிய மற்றொரு புகைப்படமும் இடம் பெற்று இருந்தது. பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்தை கேலி செய்து இந்த புகைப்படம் வெளியிடப்பட்டு இருந்தது.
சமூக வலைதளங்களில் இந்த படம் வெளியிடப்பட்டதும், கடும் விமர்சனத்திற்குள்ளானது. பிரதமர் மோடியை இழிவு படுத்தும் வகையிலும், தேசிய உணர்வுகளை காயப்படுத்தும் வகையிலும் இந்த பதிவு இருப்பதாக ஏஐபி குழு மீது குற்றச்சாட்டு எழுந்தது. பாஜக ஆதரவாளர்களின் கடும் எதிர்ப்புக்கு பணிந்த , ஏஐபி குழு பிரதமர் மோடி குறித்த அந்த பதிவை நீக்கிவிட்டது. எனினும் ஏஐபி குழு மீது மும்பை சைபர் பிரிவு போலீசார் முதல் தகவல் அறிக்கை(FIR) பதிவு செய்துள்ளனர். இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 500(அவதூறு),பிரிவு-67 ஐடி சட்டம் (மின்னணு ஊடகங்கள் வாயிலாக இழிவான கருத்துக்களை பரப்புவது) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த பிரிவுகளின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். ஏஐபி சமூக வலைதள குழுவின் முதன்மையானவர்களில் ஒருவரான தன்மயி பாட் என்பவர், விமர்சனத்திற்கு எதிராக தொடர்ந்து டுவிட்டரில் பதிலடி கொடுத்து வந்தார். வழக்குப்பதிவு செய்யப்பட்டதும், ஏஐபி குழுவுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பலர் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story