அமர்நாத் யாத்திரை பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக எம்.எல்.ஏவின் கார் ஓட்டுநர் கைது
அமர்நாத் யாத்ரீகர்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக ஆளும் கட்சி எம்.எல்.ஏவின் கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரீநகர்,
காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் அமர்நாத் சென்று பனி லிங்கத்தை தரிசித்து விட்டு பஸ்சில் திரும்பிக்கொண்டு இருந்த பக்தர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 7 பக்தர்கள் உயிரிழந்தனர்.
19 பேர் காயம் அடைந்தனர். இச்சம்பவம் காஷ்மீர் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதலுக்கு உலகம் முழுவதும் கண்டனங்கள் எழுந்தன. லஷ்கர் இ தொய்பா இயக்கம் தான் இந்த தாக்குதலுக்கு பின்னணியில் இருப்பதாக தகவல் வெளியானது.
இந்த தாக்குதல் தொடர்பாக சிறப்புக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஜம்முகாஷ்மீரில் ஆளும் மக்கள் ஜனநாயக கட்சியின் எம்.எல்.ஏவான அஜாஸ் அகமது மிர் என்பவரின் கார் ஓட்டுநர் தவுசிப் அகமது என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புல்வாமாவை சேர்ந்த இவர் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story