55 எம்.பி.க்கள் சொந்த மாநிலங்களில் ஓட்டு போடுகின்றனர்


55 எம்.பி.க்கள் சொந்த மாநிலங்களில் ஓட்டு போடுகின்றனர்
x
தினத்தந்தி 17 July 2017 5:03 AM IST (Updated: 17 July 2017 5:03 AM IST)
t-max-icont-min-icon

ஜனாதிபதி தேர்தலில் எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் இன்று ஓட்டு போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

ஜனாதிபதி தேர்தலில் எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் இன்று (திங்கட்கிழமை) ஓட்டு போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எம்.பி.க்கள் இங்கு ஓட்டு போடுவதுதான் நடைமுறை.

இருப்பினும் 55 எம்.பி.க்கள் தங்கள் சொந்த மாநிலங்களில் சட்டசபை வளாகங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் ஓட்டு போடுகிறார்கள். இதற்கான சிறப்பு அனுமதியை அவர்கள் தேர்தல் கமி‌ஷனிடம் பெற்றுள்ளனர். அவர்களில் 14 பேர் மேல்–சபை எம்.பி.க்கள், 41 பேர் மக்களவை எம்.பி.க்கள் ஆவார்கள்.

அந்த வகையில், இன்னும் எம்.பி. பதவியைத் துறக்காத உத்தரபிரதேச மாநில முதல்–மந்திரி யோகி ஆதித்யநாத்தும், துணை முதல்–மந்திரி கேசவ் பிரசாத் மவுரியாவும் லக்னோவிலும், கோவா முதல்–மந்திரி மனோகர் பாரிக்கர் பனாஜியிலும் இன்று ஓட்டு போடுகிறார்கள்.

சொந்த மாநில சட்டசபை வாக்குச்சாவடிகளில் ஓட்டு போட அனுமதி பெற்ற எம்.பி.க்களில் பெரும்பாலானவர்கள், மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் என தகவல்கள் கூறுகின்றன.

இதேபோல், 5 எம்.எல்.ஏ.க்கள், பாராளுமன்ற வளாக வாக்குச்சாவடியில் ஓட்டு போட அனுமதி பெற்றுள்ளனர். மேலும் 4 பேர், தாங்கள் தேர்ந்தெடுக்கப்படாத பிற மாநில சட்டசபை வாக்குச்சாவடிகளில் ஓட்டு போட உள்ளனர். இதற்கு தேர்தல் கமி‌ஷன் அனுமதி அளித்துள்ளது.


Next Story