எதிர்க்கட்சிகள் அமளி: மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு


எதிர்க்கட்சிகள் அமளி: மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 18 July 2017 2:55 PM IST (Updated: 18 July 2017 2:55 PM IST)
t-max-icont-min-icon

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. 

இந்நிலையில், பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் பல்வேறு முறை ஒத்தி வைத்தார். இருப்பினும், மக்களவையில் விவசாயிகள் பிரச்சனை, பசு விவகாரம் உள்ளிட்ட விவகாரங்களை எதிர்க்கட்சிகள் எழுப்பி தொடர் அமளியில் ஈடுபட்டதால் அவை நாளை காலை 11 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், ராஷ்டிர ஜனதா தளம் மற்றும் இடதுசாரி கட்சிகளின் உறுப்பினர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். மேலும், கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளையும் தாங்கி பிடித்தவாறு அமளியில் ஈடுபட்டனர்.பசு பாதுகாப்பு விவசாயிகள் பிரச்சனையை திசை திருப்பும் முயற்சி, விஜய் மல்லையாவை வெளிநாட்டுக்கு செல்ல அனுமதித்தது யார்? என்பது போன்ற வாசகங்கள் அதில் இடம்பெற்றன.

அதேபோல், மாநிலங்களவையிலும் பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி பகுஜன் சமாஜ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டதால் அவை நண்பகல் 12 மணி வரையும் பின்னர் பிற்பகல் 2 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டது. 

பின்னர் அவை கூடியதும், பேச அனுமதி தரப்படவில்லை எனவும் தான் ராஜினாமா செய்யப்போவதாகவும் மாயாவதி ஆவேசமாக தெரிவித்தார். இதனால், பகுஜன் சமாஜ் கட்சி எம்.பிக்கள் அவையில் மையப்பகுதிக்கு கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், மாநிலங்களவை 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Next Story