மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் மாயாவதி
தலித்கள் மீதான தாக்குதல் குறித்து அவையில் பேச அனுமதி அளிக்காததால் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை மாயாவதி ராஜினாமா செய்தார்.
புதுடெல்லி,
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் துவங்கியுள்ளது. முதல் நாளான நேற்று, மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. இரண்டாம் நாளான இன்று, பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் பல்வேறு பிரச்சினைகளை கிளப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
மாநிலங்களவையில் தலித் பிரச்சினைகள் பற்றி பேச வேண்டும் என்று மாயாவதி கோரிக்கை விடுத்தார். ஆனால், 3 நிமிடம் மட்டுமே பேச அனுமதிக்க முடியும் என்று மாநிலங்களவை துணைத்தலைவர் குரியன் தெரிவித்து விட்டார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மாயாவதி, தலித் பிரச்சினைகள் பற்றி பேச அனுமதி இல்லையென்றால் நான் பதவியை ராஜினாமா செய்வேன் என்று ஆவேசமாக கூறிவிட்டு வெளிநடப்பு செய்தார்.
தொடர்ந்து, தனது கட்சித்தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு பிற்பகல் பேட்டி அளித்த மாயாவதி இதே கருத்தை முன்வைத்தார். இந்த நிலையில், மாயாவதி தனது மாநிலங்களைவை உறுப்பினர் பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தையும் மாயாவதி வழங்கியுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரான மாயாவதியின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் 2018 எப்ரல் வரை உள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story