சுனந்தா புஷ்கர் எப்படி உயிரிழந்தார் என்று கூற முடியவில்லை: சிறப்பு விசாரணைக்குழு


சுனந்தா புஷ்கர் எப்படி உயிரிழந்தார் என்று கூற முடியவில்லை: சிறப்பு விசாரணைக்குழு
x
தினத்தந்தி 20 July 2017 3:16 PM IST (Updated: 20 July 2017 3:16 PM IST)
t-max-icont-min-icon

சுனந்தா புஷ்கர் எப்படி உயிரிழந்தார் என்று கூற முடியவில்லை என்று நீதிமன்றத்தில் காவல்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

புதுடெல்லி,

முன்னாள் மத்திய மந்திரி சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர். இவர் டெல்லி சாணக்கியபுரியில் உள்ள லீலாவதி பேலஸ் என்ற சொகுசு ஓட்டலில், 345–ம் எண் அறையில், 2014–ம் ஆண்டு,  ஜனவரி மாதம் 17–ந் தேதி காயங்களுடன், மர்மமான முறையில் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

முதலில் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்கு பதிவு செய்த டெல்லி போலீஸ், பின்னர் மறு விசாரணை நடத்தி கடந்த ஆண்டு ஜனவரி மாதம், அதை கொலை வழக்காக மாற்றியது. சுனந்தா புஷ்கரின் மரணத்துக்கு காரணம் விஷம் என டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் குழு கண்டறிந்தது. அதைத் தொடர்ந்து அவரது உடல் உள்ளுறுப்புகளை பரிசோதனைக்காக அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் உள்ள எப்.பி.ஐ. பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்தது.

எப்.பி.ஐ. பரிசோதனை நடத்தி அதற்கான அறிக்கையை டெல்லி போலீசுக்கு அனுப்பியது. அதில் சுனந்தாவின் உடல் உள்ளூறுப்புகளில் இருந்த மாதிரிகளின் கதிர்வீச்சு நிலையானது, நிர்ணயிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு எல்லைக்குள்தான் அமைந்திருந்தன என்பவை உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றிருந்தன.
ஆனால் அந்த அறிக்கையை வைத்து, சுனந்தா புஷ்கர் மரணத்துக்கு காரணம் இதுதான் என டெல்லி போலீஸ் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை.

இதற்கிடையே, பா.ஜ.க. தலைவர் சுப்ரமணிய சாமி, சுனந்தா புஷ்கர் கொலை வழக்கில் சி.பி.ஐ. விசாரணை திருப்திகரமாக இல்லை. எனவே, வழக்கின் இப்போதைய நிலை குறித்த அறிக்கை வேண்டும் எனக் கோரி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.அந்த மனு, டெல்லி ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனு நீதிபதிகள் ஜி.எஸ்.சிஸ்தானி மற்றும் சந்தர்சேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள்,  இந்த வழக்கின் இப்போதைய நிலை குறித்த அறிக்கையை இன்னும் 3 நாட்களுக்குள் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என டெல்லி போலீசாருக்கு உத்தரவிட்டனர். ஆனால், இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வருவதால், சிறிது கால அவகாசம் வேண்டும் என போலீசார் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, போலீசாரின் கோரிக்கையை ஏற்று, ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.  இது குறித்து போலீஸ் அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், “ விசாரணையில் இன்னும் சில விவரம் தெரியவரவில்லை எனவும், அது குறித்து விசாரணை நடப்பதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளோம்” என்றார்.

Next Story