கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் கொலை, பா.ஜனதா முழு அடைப்புக்கு அழைப்பு


கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் கொலை, பா.ஜனதா முழு அடைப்புக்கு அழைப்பு
x
தினத்தந்தி 30 July 2017 4:12 AM GMT (Updated: 30 July 2017 4:12 AM GMT)

கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் கொலைக்கு கண்டனம் தெரிவித்து இன்று பா.ஜனதா முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்து உள்ளது.

திருவனந்தபுரம், 

இடதுசாரிகள் ஆட்சி நடைபெறும் கேரளாவில் இடதுசாரி தொண்டர்கள் மற்றும் பா.ஜனதா - ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. திருவனந்தபுரத்தில் நேற்று ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ராஜேஷ் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டு உள்ளார். இவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர்கள் கொன்றதாக பா.ஜனதா தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. விசாரணையை தொடங்கி உள்ள போலீஸ் குற்றவாளிகளை பிடிக்க அதிரடி நடவடிக்கைகளை தொடங்கி உள்ளது. 

போலீஸ் தேடுதல் வேட்டையில் தீவிரமாக இறங்கி உள்ளது. பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் ராஜசேகரன், கொலையின் பின்னணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்களே உள்ளனர் என குற்றம் சாட்டிஉள்ளார். ஆனால் இடதுசாரி கட்சியின் தலைமை சார்பில் இது மறுக்கப்பட்டு உள்ளது.  ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து கேரள மாநிலம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு அடைப்பு நடத்த பா.ஜ.க. அழைப்பு விடுத்துள்ளது. 

பாரதீய ஜனதா கட்சியின் அலுவலகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் பாலகிருஷ்ணன் மகன் பினிஷ் கொடியேறியின் வீடு தாக்கப்பட்டதை அடுத்து ஜூலை 28-ம் தேதியில் மூன்று நாட்கள் தடை உத்தரவு போடப்பட்டு போலீஸ் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக இடதுசாரி கட்சியின் மாணவர் அணியை சேர்ந்த 4 மாணவர்கள் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர் வெட்டிக் கொலை செய்யப்பட்டது அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story