மோட்டார் வாகன திருத்த மசோதாவை மேல்-சபை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப முடிவு


மோட்டார் வாகன திருத்த மசோதாவை மேல்-சபை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப முடிவு
x
தினத்தந்தி 5 Aug 2017 9:45 PM GMT (Updated: 5 Aug 2017 9:13 PM GMT)

மோட்டார் வாகன திருத்த மசோதாவை மேல்-சபையின் தேர்வுக்குழுவுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது.

புதுடெல்லி,

போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு அதிக அளவு அபராதம் விதித்தல், விபத்தில் படுகாயம் அடைவோருக்கு ரூ.5 லட்சம் வரை இழப்பீடு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் வகையில் மோட்டார் வாகன சட்டம் 1988-ல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இந்த திருத்த மசோதா பாராளுமன்றத்தில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து மேல்-சபையில் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது. மேல்-சபை துணைத்தலைவர் பி.ஜே.குரியன் தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில், இந்த மசோதா குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது மழைக்கால கூட்டத்தொடர் இன்னும் சில நாட்களில் முடிவடைவதால், இந்த மசோதாவை படிக்க கூடுதல் அவகாசம் வேண்டும் என எதிர்க்கட்சிகள் வேண்டுகோள் விடுத்தன.

இதைத்தொடர்ந்து இந்த மசோதாவை மேல்-சபையின் தேர்வுக்குழுவுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி புதிதாக அமைக்க உள்ள தேர்வுக்குழு இந்த மசோதாவை ஆய்வு செய்து வருகிற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் அறிக்கை அளிக்கும். அதைத்தொடர்ந்து அந்த கூட்டத்தொடரில் இந்த மசோதா நிறைவேற்றப்படும். இதற்கு அனைத்துக்கட்சிகளும் ஒப்புக்கொண்டதாக மத்திய சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி தெரிவித்தார். 

Next Story