உணர்ச்சிபூர்வமான லவ் ஜிகாத் வழக்கு தேசிய புலனாய்வுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு


உணர்ச்சிபூர்வமான லவ் ஜிகாத் வழக்கு  தேசிய புலனாய்வுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
x
தினத்தந்தி 7 Aug 2017 5:46 AM GMT (Updated: 7 Aug 2017 5:46 AM GMT)

நாட்டில் இந்துப் பெண்களை காதலித்து முஸ்லிம் மதத்துக்கு மாற்றும் சதி நடக்கிறது (லவ் ஜிகாத்)’ என்று இந்துத்துவா அமைப்புகள் புகார் தெரிவித்து வருகின்றன. இதுதொடர்பான வழக்கு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டில் முதல் முறையாக விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. வழக்கின் விவரம் வருமாறு:-

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் கே.எம்.அசோகன். இவரது மகள் அகிலா என்பவரை மதம் மாற்றி ஷபின் ஜகான் என்பவர் திருமணம் செய்துள்ளார். இதை எதிர்த்து கேரள ஐகோர்ட்டில் அசோகன் வழக்குத் தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த ஐகோர்ட், இந்த திருமணம் அவசரமாகவும் ரகசியமாகவும் நடந்ததில் சந்தேகங்கள் உள்ளன. இதில் லவ் ஜிகாத் சதி இருக்குமோ என்ற சந்தேகமும் எழுகிறது என்று கூறி திருமணத்தை ரத்து செய்தது.

இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில்  ஷபின் ஜகான் மேல்முறையீடு செய்துள்ளார். அதில், ‘‘24 வயதாகும் மேஜரான பெண்ணுக்கு யாரை திருமணம் செய்து கொள்ள வேண்டும், எந்த மத நம்பிக்கையைப் பின்பற்ற வேண்டும் என்று முடிவு செய்யும் உரிமை உள்ளது’’ என்று கூறியுள்ளார்.

இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்  தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

அப்போது, ஷபின் ஜகான் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், இந்திரா ஜெய்சிங் ஆகியோர் ஆஜராயினர். அவர்கள் வாதிடுகையில் கூறியதாவது:

இந்தத் திருமணத்தை ஐகோர்ட்  ரத்து செய்தது துரதிருஷ்டவசமானது. சம்பந்தப்பட்ட பெண்ணை சந்திக்க கணவருக்குக் கூட அனுமதி வழங்கவில்லை.

அந்தப் பெண்ணை அழைத்து இந்த நீதிமன்றம் விசாரிக்க வேண்டும். அவர் பாதுகாப்பாக இருக்கிறாரா, சுதந்திரமாக இருக்கிறாரா, அவர் உயிருடன்தான் இருக்கிறாரா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

அந்த பெண்ணின் வீட்டை சுற்றி போலீசார் உள்ளனர். அவரை சந்திக்க யாரையும் அனுமதிக்கவில்லை.

இன்னும் 24 மணி நேரத்தில் அந்தப் பெண்ணை இந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அவரது தந்தைக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்ணின் தந்தை அசோகனின் சார்பில் மூத்த வழக்கறிஞர் மாதவி திவான் வாதிடுகையில், அசோகனுக்கு அகிலா ஒரே பெண். சில சதி வேலைகளால் அவர் மனரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளார். அதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க முடியும் என்று கூறியுள்ளார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டசுப்ரீம் கோர்ட்  நீதிபதிகள், இந்த வழக்கில் தேசிய புலனாய்வு ஏஜென்சியின் சார்பில் ஆஜராகும்படி கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மனீந்தர் சிங்கை கேட்டுக் கொண்டனர். மேலும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஆவணங்களை 10 நாட்களுக்குள் சமர்ப்பிக்க தேசிய புலனாய்வு ஏஜென்சி, அசோகன் ஆகியோருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், இது ஒரு உணர்ச்சிபூர்வமான வழக்கு என்றும் அவ்வளவு எளிதில் அப்பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியாது எனவும் கூறியுள்ளனர்.

Next Story