குஜராத் மாநிலங்களவை தேர்தல்: எம்.எல்.ஏ.க்கள் இருவர் அளித்த ஓட்டு செல்லாது தேர்தல் ஆணையம் அறிவிப்பு


குஜராத் மாநிலங்களவை தேர்தல்: எம்.எல்.ஏ.க்கள் இருவர் அளித்த ஓட்டு செல்லாது தேர்தல் ஆணையம் அறிவிப்பு
x
தினத்தந்தி 8 Aug 2017 7:16 PM GMT (Updated: 8 Aug 2017 7:15 PM GMT)

பாஜகவுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இருவர் அளித்த ஓட்டு செல்லாது என தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்தது.

புதுடெல்லி,

குஜராத்தில் இருந்து டெல்லி மேல்–சபையில் காலியாக உள்ள 3 இடங்களுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) தேர்தல் நடைபெற்றது. பா.ஜனதா சார்பில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி, பல்வந்த்சிங் ராஜ்புத் (காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்தவர்) ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தியின் அரசியல் செயலாளர் அகமது பட்டேலும் போட்டியிட்டனர். 3 இடங்களுக்கு 4 வேட்பாளர்கள் களத்தில் இருந்ததால், தேர்தலில் கடும் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே தேர்தல் அறிவிப்பு வெளியானதும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் ராஜினாமா செய்து பா.ஜனதாவை நோக்கி ஓட்டம் பிடித்தனர். இதனையடுத்தே காங்கிரஸ் மீதம் இருக்கும் எம்.எல்.ஏ.க்களை பெங்களூரு கொண்டு வந்தது. அவர்கள் நேற்று குஜராத் கொண்டு செல்லப்பட்டனர். அங்குள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். இன்று காந்திநகர் சட்டசபையில் டெல்லி மேல்–சபை தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.

வாக்குப்பதிவு நடைபெற்ற போது, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இருவர்,தாங்கள் பதிவு செய்த வாக்குச்சீட்டை பா.ஜ.தலைவர்களிடம் காண்பித்தனர்.  .இது தொடர்பாக  தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்த காங்கிரஸ், கட்சி மாறி வாக்களித்த  எங்களது கட்சி எம்.எல்.ஏ.க்கள் வாக்கை செல்லாது என அறிவிக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியது. இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் குவிந்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், நிர்மலா சீதாராமன், பியூஸ் கோயல், உள்ளிட்டோர் காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும் தேர்தல் ஆணையத்தில் சென்று முறையிட்டனர்.

இதையடுத்து வாக்குப்பதிவின் முழுமயான வீடியோ காட்சிகளை ஆய்வு செய்ய தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.

முடிகளை வெளியிடுவது குறித்து தேர்தல் ஆணைய உயர்மட்டக்குழுவினர் தீவிர ஆலோசனை நடத்தினர். அதனை தொடர்ந்து குஜராத் மாநிலம் தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்தில் ஓட்டு எண்ணிக்கை துவங்கும் என தகவல்கள் வெளியாயின.

இதன்படி ஓட்டு எண்ணிக்கை இரவு துவங்கியது. இதில் காங்கிரஸ் கோரிக்கையை ஏற்றி பா.ஜ.க. வுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அளித்த ஒட்டு செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் ஆணையம் அறிவிப்பதை தொடர்ந்து குஜராத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Next Story