டெல்லியில் சேலம் உருக்காலை தொழிலாளர்கள் தர்ணா

இந்தியாவில் சேலம், பிலாய், ரூர்கேலா, பொகாரோ, பர்ன்பூர், துர்காபூர், விசாகப்பட்டினம் மற்றும் பத்ராவதி ஆகிய 8 இடங்களில் உருக்காலைகள் செயல்பட்டு வருகின்றன.
புதுடெல்லி,
இந்தியாவில் சேலம், பிலாய், ரூர்கேலா, பொகாரோ, பர்ன்பூர், துர்காபூர், விசாகப்பட்டினம் மற்றும் பத்ராவதி ஆகிய 8 இடங்களில் உருக்காலைகள் செயல்பட்டு வருகின்றன. பொதுத்துறை நிறுவனங்களாக இயங்கி வரும் இந்த உருக்காலைகளில் சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முயற்சிப்பதாக கூறி அதன் தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இதைப்போல பத்ராவதி, துர்காபூர், அலாய் ஆகிய உருக்காலைகளையும் அடுத்த விற்பனை இலக்காக மத்திய அரசு கொண்டுள்ளது என்று தொழிலாளர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
இந்த நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி அகில இந்திய அளவில் உருக்காலை தொழிலாளர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஐ.என்.டி.யு.சி., சி.ஐ.டி.யு., அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இணைந்த சேலம் உருக்காலை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் நடந்த இந்த தர்ணா போராட்டத்துக்கு அதன் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். 200–க்கும் மேற்பட்ட உருக்காலை தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்டனர்.