தேதி குறிப்பிடாமல் பாராளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நேற்றைய கூட்டத்தில் பேசுகையில், இக்கூட்டத்தொடரில் 14 மசோதாக்கள் இந்த அவையில் நிறைவேற்றப்பட்டன என்றார்.
புதுடெல்லி,
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 17–ந்தேதி தொடங்கியது. சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நேற்றைய கூட்டத்தில் பேசுகையில், இக்கூட்டத் தொடரில் 14 மசோதாக்கள் இந்த அவையில் நிறைவேற்றப்பட்டன. 17 புதிய மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அவையை சுமுகமாக நடைபெற ஒத்துழைத்த அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்த அவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது என்று கூறினார்.
துணை ஜனாதிபதியாக பதவியேற்ற வெங்கையா நாயுடு டெல்லி மேல்–சபை கூட்டத்தில் நேற்று பங்கேற்றார். அப்போது அவருக்கு உறுப்பினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பதவிக்காலம் முடிந்த ஹமீது அன்சாரிக்கும், 10 உறுப்பினர்களுக்கும் வழியனுப்பு விழா நடந்தது. மேலும் கோவா, மத்திய பிரதேசத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 2 புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்றனர்.
பின்னர் மேல்–சபை தலைவரான வெங்கையா நாயுடு பேசும்போது, இக்கூட்டத் தொடரில் 9 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. 2 மசோதாக்கள் திரும்ப பெறப்பட்டன. கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமாக அமைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த அவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கிறேன் என்று தெரிவித்தார்.