‘திருவள்ளுவரின் பொன்மொழிகள் நம் வாழ்வில் கடைப்பிடிக்கப்பட வேண்டியவை’ மு.க.ஸ்டாலின் பேச்சு


‘திருவள்ளுவரின் பொன்மொழிகள் நம் வாழ்வில் கடைப்பிடிக்கப்பட வேண்டியவை’   மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 2 Sep 2017 11:30 PM GMT (Updated: 2 Sep 2017 9:13 PM GMT)

திருவள்ளுவரின் பொன்மொழிகள் அனைத்தும் நம் வாழ்வில் கடைப்பிடிக்கப்பட்ட வேண்டியவை என்றும் மும்பையில் நடைபெற்ற திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

மும்பை,

தமிழர்கள் எங்கிருந்தாலும் தமிழ் உணர்வை காப்பாற்றுவார்கள் என்றும், திருவள்ளுவரின் பொன்மொழிகள் அனைத்தும் நம் வாழ்வில் கடைப்பிடிக்கப்பட்ட வேண்டியவை என்றும் மும்பையில் நடைபெற்ற திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

திருவள்ளுவர் சிலை திறப்பு

மும்பையில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா மற்றும் தி.மு.க. மூத்த தலைவர் தேவதாசனின் 89–வது பிறந்தநாள் விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தி.மு.க. செயல் தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:–

உலகப் பொதுமறையாம் திருக்குறளை நமக்குத் தந்த திருவள்ளுவரின் சிலையைத் திறந்து வைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருப்பதை எண்ணி பெருமைப்படுகிறேன். திருவள்ளுவருக்கு நாம் செய்யும் இந்த மரியாதை தமிழ்மொழிக்கு நாம் புகழ் சேர்த்துக் கொண்டிருப்பதற்கு சமம். தமிழ் மொழியின் சிறப்பு எல்லை கடந்து நிறுவப்பட்டு இருக்கிறது.

அண்மையில் அரித்துவாரில் அய்யன் வள்ளுவன் சிலை திறக்கப்பட்டது. கர்நாடக மாநிலத்தில் உள்ளது. இப்படி மற்ற மாநிலங்களிலும், உலக நாடுகளிலும் நம்மால் அதைப் பார்க்க முடிகிறது. இந்தியா முழுவதுக்குமான சொத்தாக திருவள்ளுவர் விளங்கிக் கொண்டிருக்கிறார். எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ, அவர்களுக்கு எல்லாம் ஒட்டுமொத்த சொந்தமாக திருவள்ளுவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அதனால் தான் திருக்குறளை உலகப்பொதுமறை என்று நாம் சொல்கிறோம்.

தமிழ் மரபு, தத்துவங்கள்

தமிழகத்தில் உள்ள எங்களையும், மராட்டியத்தில் உள்ள உங்களையும் தமிழ் மொழி இணைத்துக் கொண்டிருப்பதற்கு உதாரணமாக இந்த நிகழ்ச்சி அமைந்திருக்கிறது.

தமிழ் மரபையும், தத்துவங்களையும் தெரிந்து கொள்ள திருக்குறள் உதவுகிறது. தமிழினத்தின் அடையாளங்களைத் தாங்கியுள்ள இந்த இலக்கியங்கள் உலக அரங்கில் பெருமைக்குரிய சின்னங்களாக உள்ளன. திருக்குறளின் பெருமைகளை ஒவ்வொரு தமிழரும் அறிந்து வைத்திருக்க வேண்டியது மட்டுமல்ல, அனைவருக்குமான நீதி நூலாகவும் திருக்குறள் அமைந்துள்ளது.

தலைவர் கருணாநிதி 5 முறை தமிழக முதலமைச்சராக இருந்த ஒவ்வொரு ஆட்சியிலும் எத்தனையோ சாதனைகள், திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு இருந்தாலும், தமிழ் மொழிக்காக, தமிழறிஞர்களுக்காக, தமிழ் புலவர்களுக்காக, தமிழ் மொழி மேலும் பல சிறப்புகளைப் பெற்றாக வேண்டும் என்பதற்காக, எத்தனையோ பணிகளை அவர் நிறைவேற்றி இருக்கிறார்.

பிறந்த வீடு, புகுந்த வீடு

திருவள்ளுவரின் பொன்மொழிகள் அத்தனையும், நம் வாழ்வில் கடைப்பிடிக்கப்பட வேண்டியவை தமிழர்கள் எங்கிருந்தாலும், தமிழ் உணர்வை காப்பாற்றுவார்கள், தமிழ் மொழியை காப்பாற்றுவார்கள்.

மணப்பெண்கள் தங்கள் பிறந்த வீட்டையும் சரி, புகுந்த வீட்டையும் சரி எப்போதும் மறப்பதில்லை. அதுபோலவே, நீங்கள் தமிழ்நாட்டையும் மறப்பதில்லை, இந்த மராட்டிய மாநிலத்தையும் மறப்பதில்லை. அதாவது, பிறந்த வீட்டையும் மறப்பதில்லை, புகுந்த வீட்டையும் மறப்பதில்லை. ஆக, பிறந்த வீட்டுக்குப் பெருமை சேர்க்க எப்படி மணப்பெண் முயற்சிக்கிறாளோ, அதே நேரத்தில், பிறந்த வீட்டிலும் தான் புகுந்த வீட்டுக்குப் பெருமை சேர்க்க எப்படி முயற்சிக்கிறாளோ, அப்படிப்பட்ட பணியைத்தான் நீங்களும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறீர்கள்.

ஆகவே, தமிழுக்குப் பெருமைச் சேர்க்கும் வகையில் இந்த விழா நடைபெறுகிறது. தமிழ் மொழிக்குச் சிறப்புச் சேர்க்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் நான் பெருமையடைகிறேன், மகிழ்ச்சியடைகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story