மத்திய மந்திரிசபையில் மாற்றம் 9 புதிய மந்திரிகள் நியமனம் இன்று பதவி ஏற்கிறார்கள்


மத்திய மந்திரிசபையில் மாற்றம் 9 புதிய மந்திரிகள் நியமனம் இன்று பதவி ஏற்கிறார்கள்
x
தினத்தந்தி 2 Sep 2017 11:30 PM GMT (Updated: 2 Sep 2017 9:16 PM GMT)

மத்தியில் புதிதாக 9 மந்திரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் இன்று பதவி ஏற்கிறார்கள்.

புதுடெல்லி,

மத்தியில் புதிதாக 9 மந்திரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் இன்று பதவி ஏற்கிறார்கள்.

மந்திரிகள் ராஜினாமா

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த 2014–ம் ஆண்டு மே மாதம் பதவி ஏற்றது. அதன் பிறகு முதன் முதலாக அந்த ஆண்டு நவம்பர் மாதம் 9–ந் தேதி பிரதமர் மோடி தனது மந்திரிசபையை விரிவுபடுத்தினார். பின்னர் கடந்த ஆண்டு ஜூலை 5–ந் தேதி மந்திரிசபையை மாற்றி அமைத்தார். 3–வது முறையாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) தனது மந்திரிசபையை மாற்றி அமைக்க முடிவு செய்தார்.

மந்திரிகளின் செயல்பாட்டை உன்னிப்பாக கவனித்து வந்த மோடி, திருப்திகரமாக செயல்படாதவர்களை நீக்கிவிட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க தீர்மானித்தார். அவர் மந்திரிசபையை மாற்றி அமைப்பதற்கு வசதியாக ராஜாங்க மந்திரிகளான ராஜீவ் பிரதாப் ரூடி (திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர்– தனி பொறுப்பு), பக்கன் சிங் குலாஸ்டே (சுகாதாரம், குடும்பநலம்), சஞ்சீவ் குமார் பல்யான் (நீர்வளம்), பண்டாரு தத்தாத்ரேயா (தொழிலாளர் நலம்–தனி பொறுப்பு), மகேந்திரநாத் பாண்டே (மனிதவள மேம்பாடு) ஆகியோர் தங்கள் மந்திரி பதவியை ராஜினாமா செய்ததாக தகவல் வெளியானது.

சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை மந்திரி கல்ராஜ் மிஸ்ராவும் ராஜினாமா செய்தார்.

9 புதிய மந்திரிகள் நியமனம்

இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி, பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த 9 பேரை நேற்று மந்திரிகளாக நியமித்தார்.

புதிய மந்திரிகளின் பெயர் விவரம் வருமாறு:–

1. அஸ்வினி குமார் சவுபே (பீகார்)

2. வீரேந்திர குமார் (மத்திய பிரதேசம்)

3. சிவ் பிரதாப் சுக்லா (உத்தரபிரதேசம்)

4. அனந்த் குமார் ஹெக்டே

5. ராஜ்குமார் சிங்

6. ஹர்தீப் புரி (முன்னாள் வெளியுறவு அதிகாரி)

7. கஜேந்திர சிங் செகாவத்

8. சத்யபால் சிங் (மும்பை முன்னாள் போலீஸ் கமி‌ஷனர்)

9. அல்போன்ஸ் கன்னன்தானம் (முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி)

இன்று பதவி ஏற்பு

புதிதாக நியமிக்கப்பட்ட மந்திரிகள் இன்று பதவி ஏற்றுக்கொள்கிறார்கள்.

பதவி ஏற்பு விழா இன்று காலை 10 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் நடைபெறுகிறது. புதிய மந்திரிகளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.

பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி மற்றும் மந்திரிகள் கலந்துகொள்கிறார்கள்.

சமீபத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த பீகார் முதல்–மந்திரி நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம், அ.தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு மத்திய மந்திரிசபையில் இடம் அளிக்கப்படலாம் என்று கூறப்பட்டது. ஆனால் அந்த கட்சிகளைச் சேர்ந்தவர்கள் யாரும் மந்திரிசபையில் சேர்க்கப்படவில்லை.

நிதின் கட்காரி

போக்குவரத்து சம்பந்தப்பட்ட இலாகாக்கள் அனைத்தும் ஒருவரிடமே இருக்கவேண்டும் என்ற நோக்கத்தில் தற்போது சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து மந்திரியாக இருக்கும் நிதின் கட்காரியிடமே ரெயில்வே இலாகாவும் ஒப்படைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

ரசாயனம், உரம் மற்றும் பாராளுமன்ற விவகார துறை மந்திரியாக இருக்கும் அனந்தகுமாருக்கு வேளாண்மை துறை ஒதுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.


Next Story