மத்திய மந்திரிசபை விரிவாக்கம் புதியதாக நியமனம் செய்யப்பட்ட 9 பேர் மந்திரிகளாக பதவியேற்பு


மத்திய மந்திரிசபை விரிவாக்கம் புதியதாக நியமனம் செய்யப்பட்ட 9 பேர் மந்திரிகளாக பதவியேற்பு
x
தினத்தந்தி 3 Sep 2017 5:38 AM GMT (Updated: 3 Sep 2017 5:38 AM GMT)

மத்திய மந்திரிசபையில் புதியதாக நியமனம் செய்யப்பட்ட 9 பேர் மந்திரியாக பதவியேற்றுக் கொண்டனர்.


புதுடெல்லி,

மந்திரிகளின் செயல்பாட்டை உன்னிப்பாக கவனித்து வந்த மோடி, திருப்திகரமாக செயல்படாதவர்களை நீக்கிவிட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க தீர்மானித்தார். அதன்படி மத்திய மந்திரிசபையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அவர் மந்திரிசபையை மாற்றி அமைப்பதற்கு வசதியாக ராஜாங்க மந்திரிகளான ராஜீவ் பிரதாப் ரூடி (திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர்– தனி பொறுப்பு), பக்கன் சிங் குலாஸ்டே (சுகாதாரம், குடும்பநலம்), சஞ்சீவ் குமார் பல்யான் (நீர்வளம்), பண்டாரு தத்தாத்ரேயா (தொழிலாளர் நலம்–தனி பொறுப்பு), மகேந்திரநாத் பாண்டே (மனிதவள மேம்பாடு) ஆகியோர் தங்கள் மந்திரி பதவியை ராஜினாமா செய்ததாக தகவல் வெளியானது.

சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை மந்திரி கல்ராஜ் மிஸ்ராவும் ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி, பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த 9 பேரை நேற்று மந்திரிகளாக நியமித்தார். 

1. அஸ்வினி குமார் சவுபே (பீகார்)

2. வீரேந்திர குமார் (மத்திய பிரதேசம்)

3. சிவ் பிரதாப் சுக்லா (உத்தரபிரதேசம்)

4. அனந்த் குமார் ஹெக்டே (கர்நாடகா)

5. ராஜ்குமார் சிங்

6. ஹர்தீப் புரி (முன்னாள் வெளியுறவு அதிகாரி)

7. கஜேந்திர சிங் செகாவத்

8. சத்யபால் சிங் (மும்பை முன்னாள் போலீஸ் கமி‌ஷனர்)

9. அல்போன்ஸ் கன்னன்தானம் (முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி) ஆகியோர் புதிய மந்திரிகளாக அறிவிக்கப்பட்டனர். ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விழாவில் புதிதாக நியமிக்கப்பட்ட மந்திரிகள் பதவி ஏற்றுக்கொண்டார்கள். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். முன்னதாக ஏற்கனவே அமைச்சர்களாக இருந்த முக்தார் அப்பாஸ் நக்வி, பியூஸ் கோயல், நிர்மலா சீதாராமன் மற்றும் தர்மேந்திரபிரதான் கேபினட் மந்திரியாக பதவி ஏற்றுக் கொண்டனர். யாருக்கு எந்த துறை என்பது 11:30 மணியளவில் அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது, பாதுகாப்பு மற்றும் ரெயில்வே துறை யாருக்கு ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. விழாவில் பிரதமர் மோடி, பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷா மற்றும் எம்.பி.க்கள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். 


Next Story