வருவாய் துறை அதிகாரிகள் லஞ்சம் கேட்டதால் இளைஞர்கள் தீக்குளிப்பு, மருத்துவமனையில் சிகிச்சை

வருவாய் துறை அதிகாரிகள் லஞ்சம் கேட்டதால் இளைஞர்கள் தங்களுக்கு தீ வைத்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஐதராபாத்,
தெலுங்கானாவில் அரசு திட்டத்தில் பயன்பெற வருவாய் துறை அதிகாரிகள் லஞ்சம் கேட்டதால் இளைஞர்கள் இந்த விபரீத முடிவை எடுத்து உள்ளனர். தெலுங்கானா அரசு நிலம் இல்லாத தலித் பிரிவினருக்கு இலவசமாக நிலம் வழங்கி வருகிறது. சித்திபேட் மாவட்டம் பெஜெங்கி தாலுகாவிற்கு உட்பட்ட குடேம் கிராமத்தை சேர்ந்த இரு தலித் இளைஞர்கள் திட்டத்தின் கீழ் உதவியினை பெற முயற்சி செய்து உள்ளனர். ஆனால் அரசு திட்டத்தின் கீழ் பயன்பெற இளைஞர்களின் பெயரை சேர்ப்பதற்கு வருவாய் துறை அதிகாரிகள் லஞ்சம் கேட்டு உள்ளனர்.
இதனால் மிகவும் வேதனைக்கு உள்ளாகிய இளைஞர்கள் அவர்களுடைய தொகுதி ஆளும்கட்சி எம்.எல்.ஏ. ராசாமாயி பாலகிருஷ்ணனை சந்திக்க அவருடைய அலுவலகம் சென்று உள்ளனர். ஆனால் எம்.எல்.ஏ. ராசாமாயி பாலகிருஷ்ணன் அங்கு இல்லை.
நீண்ட நேரம் காத்திருந்த அவர்கள் வேதனையில் தாங்கள் வைத்திருந்த பெட்ரோலை தங்கள் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டனர். உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் காப்பாற்றி, அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இளைஞர் ஸ்ரீநிவாஸ்க்கு 60 சதவித தீக்காயமும், பர்சாராமுலு 40 சதவித தீக்காயமும் ஏற்பட்டு உள்ளது என டாக்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தெலுங்கானா மாநில நிதிமந்திரி ராஜேந்தர் இவ்விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளார். இளைஞர்களை மருத்துவமனையில் சென்று பார்த்து, மருத்துவர்களிடம் விபரம் கேட்டறிந்தார். இச்சம்பவத்தை அடுத்து அங்கு போராட்டமும் நடைபெற்று உள்ளது.
Related Tags :
Next Story