கெஜ்ரிவாலுக்கு மீண்டும் ரூ.5 ஆயிரம் அபராதம்


கெஜ்ரிவாலுக்கு மீண்டும் ரூ.5 ஆயிரம் அபராதம்
x
தினத்தந்தி 4 Sep 2017 10:44 PM GMT (Updated: 4 Sep 2017 10:44 PM GMT)

டெல்லி கிரிக்கெட் சங்கம் தொடர்பாக ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதல்–மந்திரியுமான கெஜ்ரிவால் மீது மத்திய மந்திரி அருண் ஜெட்லி, அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

புதுடெல்லி,

டெல்லி கிரிக்கெட் சங்கம் தொடர்பாக ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதல்–மந்திரியுமான கெஜ்ரிவால் மீது மத்திய மந்திரி அருண் ஜெட்லி, அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார். டெல்லி ஐகோர்ட்டில் கடந்த மே 17–ந்தேதி நடந்த இந்த வழக்கு விசாரணையின் போது கெஜ்ரிவாலின் வக்கீலான ராம் ஜெத்மலானி, ஜெட்லியை திட்டியதாக தெரிகிறது.

எனவே கெஜ்ரிவால் மீது 2–வது அவதூறு வழக்கை ஜெட்லி தாக்கல் செய்தார். இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்குமாறு கெஜ்ரிவாலுக்கு மே 23–ந்தேதி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் அவர் பதிலளிக்காததை தொடர்ந்து அவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதுடன், ஜூலை 26–ந்தேதிக்குள் வழக்குக்கு பதிலளிக்குமாறும் உத்தரவிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஜெட்லி தொடர்ந்த 2–வது அவதூறு வழக்கில் கெஜ்ரிவால் பதில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, கோர்ட்டு அளித்த காலக்கெடுவுக்குள் கெஜ்ரிவால் பதிலளிக்கவில்லை எனக்கூறி ஜெட்லியின் வக்கீல் மனிக் தோக்ரா குற்றம் சாட்டினார்.

இதை கருத்தில் கொண்ட ஐகோர்ட்டு பதிவாளர் கெஜ்ரிவாலுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். பின்னர் இந்த வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் (அக்டோபர்) 12–ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.


Next Story