‘வாட்ஸ்அப்’ ப்ரைவஸி பாலிசி; தனிப்பட்ட விவரங்களை பாதுகாக்கும் விஷயத்தை ஆராய குழு - மத்திய அரசு


‘வாட்ஸ்அப்’  ப்ரைவஸி பாலிசி; தனிப்பட்ட விவரங்களை பாதுகாக்கும் விஷயத்தை ஆராய குழு - மத்திய அரசு
x
தினத்தந்தி 6 Sep 2017 3:16 PM GMT (Updated: 6 Sep 2017 3:16 PM GMT)

‘வாட்ஸ்அப்’ பயன்படுத்துவோரின் தனிப்பட்ட விவரங்களை பாதுகாக்கும் விஷயத்தை ஆராய வல்லுனர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது.


புதுடெல்லி,


சர்வதேச அளவில் அதிக பயன்பாட்டாளர்களைக் கொண்ட செயலியான வாட்ஸ் - அப், புதிய தனிநபர் ரகசிய கொள்கை (ப்ரைவஸி பாலிசி) ஒன்றை கடந்த ஆண்டு கொண்டு வந்தது. அதன்படி, வாட்ஸ் - அப் பயன்பாட்டாளர்களின் தொலைபேசி எண்கள், அவர்கள் பயன்படுத்தும் செல்லிடப்பேசியின் வகை, அவற்றில் இடம்பெற்றுள்ள ஆபரேடிங் சிஸ்டம் ஆகியவை தொடர்பான தகவல்களை, தனது தாய் நிறுவனமான முகநூலில் (பேஸ்புக்) இணைக்க முடிவு செய்தது. இந்த புதிய கொள்கையை ஏற்பவர்கள் வாட்ஸ் - அப் சேவையைத் தொடரலாம் என்றும், விரும்பாதவர்கள் அந்த செயலியைப் பயன்படுத்துவதை நிறுத்திவிடலாம் என்றும் அந்நிறுவனம் கூறியிருந்தது.

இந்த நடவடிக்கையானது வாட்ஸ் - அப் பயன்பாட்டாளர்களின் அனுமதியின்றி, அவர்களது தனிப்பட்ட தகவல்களைப் பிற தளங்களில் பகிர்வதற்கான முயற்சி என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 

இதன் மூலம் பயன்பாட்டாளர்களின் ரகசியம் காக்கும் உரிமைகள் மீறப்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. வாட்ஸ் அப் முடிவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இவற்றை விசாரிக்க 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட அமர்வு அமைக்கப்பட்டது. 
வாட்ஸ் - அப் செயலியின் புதிய கொள்கைக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கின் மீதான விசாரணையின் போது இன்று மத்திய அரசு ‘வாட்ஸ்அப்’  போன்ற சமூக வலைதளங்கள் பயன்படுத்துவோரின் தனிப்பட்ட விவரங்களை பாதுகாக்கும் விஷயத்தை ஆராய வல்லுனர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது என தெரிவித்தது. 

மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடுகையில், சமூக வலைத்தளங்களை பயன்படுத்துபவர்களின் தனிப்பட்ட விவரங்களை பாதுகாக்கும் விஷயத்தை ஆராய சுப்ரீம் கோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி பி.என்.ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் இந்த துறைசார்ந்த வல்லுனர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து குறிப்பிடத்தக்க சிபாரிசுகளை அரசுக்கு அளிக்கும். அவர்கள் மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பித்த பிறகு, சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோரின் தனிப்பட்ட விவரங்களை பாதுகாக்க சட்டம் இயற்றப்படும் என்றார்.

இதனையடுத்து சுப்ரீம் கோர்ட்டு, பயனாளர்கள் விவரங்களை மூன்றாம் தரப்பினருடன் பகிர்ந்து கொள்வது உண்மையா? என்பது குறித்து 4 வாரங்களுக்குள் பிரமாண மனு தாக்கல் செய்யுமாறு வாட்ஸ்அப், பேஸ்புக் ஆகிய நிறுவனங்களுக்கு உத்தரவிட்டனர். வழக்கு விசாரணை நவம்பர் 28-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


Next Story