தேரா சச்சா சவுதா மையத்தின் தலைமை இடத்தில் அதிகாரிகள் சோதனை

தேரா சச்சா சவுதா மையத்தின் தலைமை இடத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சண்டிகர்,
அரியானா மாநிலத்தில் உள்ள தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரகீம் சிங் இரண்டு சிறுமிகளை பாலியல் பலாத்கார செய்த குற்றத்திற்காக 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டார். இவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதும், அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதையடுத்து, ராணுவம் வரவழைக்கப்பட்டு வன்முறை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள சிர்சாவில் பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பேரில் இன்று காலை அரசு அதிகாரிகள் நுழைந்து அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். 800 ஏக்கர் பரப்பளவு கொண்ட தலைமை அலுவலகத்தில் ஈபிள் டவர், தாஜ் மகால் உள்ளிட்ட உலக அதிசயங்களின் மாதிரிகள் என பல பிரம்மாண்டங்கள் உள்ளது தெரியவந்தது. இந்த வளாகத்தில் சர்வதேச பள்ளிகள், கடைகள், மருத்துவமனைகள், மைதானங்கள், வீடுகள், சினிமா தியேட்டர்கள் ஆகியவையும் உள்ளது.
இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி இன்று மாநில அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சோதனையின் போது அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதை தவிர்க்க 41 பாராமிலிடரி படைவீரர்கள், 4 ராணுவ கம்பெனிகள், 4 மாவட்ட போலீசார் மற்றும் சிறப்பு ஆயுதப்படை பிரிவினர் ஆகியோர் அடங்கிய குழுவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையை முன்னிட்டு சிர்சாவில் சில இடங்களில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மோப்ப நாய் பிரிவு மற்றும் வெடிகுண்டை செயலிழக்க செய்யும் பிரிவினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வளாகத்தில் மனித உடல்கள் புதைக்கப்பட்டு அந்த இடத்தில் மரங்கள் நட்டப்பட்டு இருப்பதாக உள்ளூர் செய்தித்தாள் ஒன்றில் செய்தி வெளியானதையடுத்து, பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அரியானா மாநில போலீஸ் தலைவர் பி எஸ் சந்து கூறுகையில், தேரா சச்சா வளாகம் மிகப்பெரியது என்பதால், ஒட்டுமொத்தமாக சோதனையிட நீண்ட காலம் பிடிக்கும்” என்றார்.
தேரா சச்சா சவுதா அமைப்பின் செய்தி தொடர்பாளர் விபாசனா இன்சான் கூறுகையில், நாங்கள் சட்டத்தை பின்பற்றி நடந்து வருகிறோம். எனவே தேரா சச்சா சவுதா அமைப்பின் ஆதரவாளர்கள் அமைதி காக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Related Tags :
Next Story