உத்தரபிரதேச சட்ட மேல்–சபை தேர்தல் யோகி ஆதித்யநாத் போட்டியின்றி தேர்வு

உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து, யோகி ஆதித்யநாத் கடந்த மார்ச் மாதம் 19–ந் தேதி முதல்–மந்திரியாக பதவி ஏற்றார்.
லக்னோ,
அவர் எம்.எல்.ஏ.வாகவோ, எம்.எல்.சி.யாகவோ இல்லை.
அவரைப்போன்று துணை முதல்–மந்திரி பதவி ஏற்ற கேசவ் பிரசாத் மவுரியா, தினேஷ் சர்மா மற்றும் மந்திரி பதவி ஏற்ற சுவதந்திர தேவ்சிங், மோசின் ராஸா ஆகியோரும் சட்டசபையிலோ, மேல்–சபையிலோ உறுப்பினர்களாக இல்லை.
இதையடுத்து அவர்கள் அந்த மாநில சட்ட மேல்–சபையில் காலியான 5 இடங்களுக்கான தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தனர். 5 இடங்களுக்கு 5 பேர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். எதிர்க்கட்சியினர் யாரும் போட்டியிட மனு தாக்கல் செய்யவில்லை.
இந்த நிலையில் நேற்று வேட்பு மனு பரிசீலனை நடந்தது. இதில் மந்திரி மோசின் ராஸாவின் வேட்பு மனு மட்டும் நிராகரிக்கப்பட்டது.
முதல்–மந்திரி யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட 4 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டு, அவர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யோகி ஆதித்யநாத்தும் (கோரக்பூர்), கேசவ் பிரசாத் மவுரியாவும் (பூல்பூர்) தொகுதிகளில் இருந்து பாராளுமன்ற மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பது நினைவுகூரத்தக்கது.