ரியான் மாணவன் கொலை: சிபிஐ விசாரணை; மத்திய, மாநில அரசுக்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்


ரியான் மாணவன் கொலை: சிபிஐ விசாரணை; மத்திய, மாநில அரசுக்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
x
தினத்தந்தி 11 Sep 2017 9:46 AM GMT (Updated: 11 Sep 2017 9:46 AM GMT)

ரியான் மாணவன் கொலையில் சிபிஐ விசாரணை தொடர்பாக மத்திய, மாநில அரசுக்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் விடுத்து உள்ளது. புதுடெல்லி,

டெல்லி அருகேயுள்ள குர்கானில் ரியான் சர்வதேச பள்ளியின் கழிவறைக்குள் கடந்த 8-ம் தேதி 2-ம் வகுப்பு படித்து வந்த ஒரு மாணவன் கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடந்தான். இந்த கொடூர சம்பவம் குறித்து குர்கான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே பள்ளிக்கூடத்தின் பஸ்சில் கண்டக்டராக பணிபுரியும் அசோக்குமார் என்பவர் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாகவும், அதற்கு சிறுவன் எதிர்ப்பு தெரிவித்ததால் கொல்லப்பட்டதாகவும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதனால் போலீசார் அசோக்குமாரை கைது செய்தனர்.

பள்ளி நிர்வாகத்தின் அலட்சியப்போக்கால்தான் சிறுவன் கொல்லப்பட்டு விட்டதாக கூறி பள்ளிக் கூடத்தின் முன்பாக பள்ளி மாணவர்களின் பெற்றோர் மற்றும் உள்ளூர்வாசிகள் நூற்றுக்கணக்கில் திரண்டு போராட்டம் நடத்தினர். சிறுவனின் படுகொலை குறித்து சி.பி.ஐ. விசாரணை வேண்டும், பள்ளி நிர்வாகத்தினர் அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்யவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. நேற்றையை போராட்டம் வன்முறையில் முடிந்தது. போலீஸ் விசாரணைக்கு முழுவதும் ஒத்துழைப்பதாக பள்ளி நிர்வாகம் கூறியது. இவ்வழக்கு தொடர்பாக பள்ளியில் பணியாற்றிய மேலும் சிலரிடம் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே மாணவன் கொலை தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி, சிறுவனின் தந்தை சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட்டு, மத்திய, மாநில அரசுக்களுக்கு நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டது. வழக்கில் சம்பந்தப்பட்ட பிற தரப்பிற்கும் நோட்டீஸ் வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. மூன்று வாரங்களில் பதிலளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.


Next Story