45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் குழுவாக ஹஜ் செல்ல அனுமதி சீராய்வு கமிட்டி பரிந்துரை


45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் குழுவாக ஹஜ் செல்ல அனுமதி சீராய்வு கமிட்டி பரிந்துரை
x
தினத்தந்தி 8 Oct 2017 4:19 AM GMT (Updated: 8 Oct 2017 4:19 AM GMT)

45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் 4 பேர் அல்லது அதற்கு மேற்பட்ட குழுவினருடன் சேர்ந்து ஹஜ் புனித பயணம் செல்ல அனுமதிக்க ஹஜ் கொள்கை சீராய்வு கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.


மும்பை,

இந்திய அரசின் சிறுபான்மையினர் விவகார அமைச்சகம் ஹஜ் கொள்கைகள் சீராய்வு கமிட்டியை அமைத்து இருந்தது. 

இந்த கமிட்டி 2018 முதல் 2022–ம் ஆண்டு வரை பின்பற்ற வேண்டிய ஹஜ் கொள்கைகளில் செய்யப்படவேண்டிய மாற்றம் குறித்த பரிந்துரைகளை அறிக்கையாக உருவாக்கி உள்ளது. ஹஜ் கொள்கைகள் சீராய்வு கமிட்டி தங்கள் பரிந்துரைகளை அரசுக்கு சமர்ப்பிக்கும் விழா நேற்று மும்பை சி.எஸ்.டி.யில் உள்ள ஹஜ் ஹவுசில் நடந்தது.

விழாவிற்கு மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி ஜனாப் முக்தார் அப்பாஸ் நக்வி தலைமை தாங்கினார். ஹஜ் கொள்கைகள் சீராய்வு கமிட்டியினர் தங்கள் பரிந்துரை அறிக்கையை சிறுபான்மையினர் நலத்துறை மந்திரியிடம் ஒப்படைத்தனர். சீராய்வு கமிட்டியின் முக்கிய பரிந்துரைகள் பின்வருமாறு:–

* அனுமதிக்கப்பட்ட ஹஜ் பயணிகள் 70 சதவீதம் பேர் இந்திய ஹஜ் கமிட்டி மூலமாகவும், 30 சதவீதம் பேர் அங்கீகரிக்கப்பட்ட தனியார் சுற்றுலா அமைப்பாளர்களாலும் அழைத்து செல்லபட வேண்டும்.

* மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கை மட்டுமில்லாமல், அங்கு இருந்து வரும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை அடிப்படையிலும் இடங்களை ஒதுக்கப்படவேண்டும்.

* ஜம்மு காஷ்மீர் ஒதுக்கீடு 2 ஆயிரமாக அதிகரிப்பு

* 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஆண் துணை இல்லாமல் (கணவன், தந்தை அல்லது அண்ணன், தம்பி) 4 பேர் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கொண்ட குழுவினருடன் செல்ல அனுமதி அளிக்க வேண்டும்

* இந்தியாவில் 21 இடங்களில் இருந்து ஹஜ் பயணிகள் அழைத்து செல்லப்பட்டு வந்தனர். இது 9 இடங்களாக குறைக்கப்பட உள்ளது. டெல்லி, லக்னோ, கொல்கத்தா, ஆமதாபாத், மும்பை, சென்னை, ஐதராபாத், பெங்களூரு, கொச்சின் ஆகிய இடங்களில் இருந்து விமானம் மூலம் ஹஜ் பயணிகளை அழைத்து செல்ல பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

* தனியார் சுற்றுலா அமைப்பாளர்கள் இனிமேல் ஹஜ் குழு அமைப்பாளர்கள் என பெயர் மாற்றப்படுவார்கள். அவர்களுக்கு தனி இணையபக்கம் இருக்கவேண்டும். ஹஜ் பயணிகள் தங்கள் கட்டணத்தை வங்கி மூலமாக மட்டுமே இவர்களுக்கு செலுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை ஹஜ் கொள்கை சீராய்வு கமிட்டி செய்துள்ளது.


Next Story