சசிகலாவின் பரோல் இன்றுடன் நிறைவு; நாளை மாலை 5 மணிக்குள் சிறைக்குள் செல்ல வேண்டும்


சசிகலாவின் பரோல் இன்றுடன் நிறைவு; நாளை மாலை 5 மணிக்குள்  சிறைக்குள் செல்ல வேண்டும்
x
தினத்தந்தி 11 Oct 2017 2:46 AM GMT (Updated: 11 Oct 2017 2:46 AM GMT)

சசிகலாவுக்கு வழங்கப்பட்ட ஐந்து நாட்கள் பரோல் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதனால் அவர் நாளை மாலை 5 மணிக்குள் சிறைக்குள் செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை,

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட அதிமுக அம்மா அணி பொதுச்செயலாளர் சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரகாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில்,  உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தனது கணவர் நடராஜனை காண கர்நாடக சிறைத்துறையிடம் பரோல் கேட்டு விண்ணப்பித்து இருந்தார். 

அவரது பரோல் மனுவை ஏற்ற சிறைத்துறை சசிகலாவை ஐந்து நாள் பரோலில் செல்ல அனுமதி வழங்கியது. மேலும், தனது பரோல் காலத்தில் அரசியல் நிகழ்வுகளில் ஈடுபடக்கூடாது என்பன உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டது. 6 ஆம் தேதி பரோலில் வெளியே வந்த சசிகலா, தனது கணவர் நடராஜனை  நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்த நிலையில், சசிகலாவின் ஐந்து நாள் பரோல் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து, நாளை மாலை 5 மணிக்குள் மீண்டும் சிறைக்குள் செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story