கனமழையே மும்பை எல்பின்ஸ்டோன் ரயில் நிலைய நெரிசலுக்கு காரணம்: விசாரணை அறிக்கையில் தகவல்


கனமழையே மும்பை எல்பின்ஸ்டோன் ரயில் நிலைய நெரிசலுக்கு காரணம்: விசாரணை அறிக்கையில் தகவல்
x
தினத்தந்தி 11 Oct 2017 9:30 AM GMT (Updated: 11 Oct 2017 9:32 AM GMT)

கனமழையே மும்பை எல்பின்ஸ்டோன் ரயில் நிலைய நெரிசலுக்கு காரணம் என்று விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

மும்பையில் எல்பின்ஸ்டோன் சாலையில் உள்ள ரயில் நிலையத்தில்  கடந்த 29 ஆம் தேதி ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 23 பேர் பலியாகினர். ரயில் நிலைய நடைமேம்பாலத்தில் ஏற்பட்ட திடீர் நெரிசலில் மூச்சுத்திணறி பயணிகள் பலியான சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி மேற்கு ரயில்வே மேலாளரிடம், மேற்கு ரயில்வே  தலைமை பாதுகாப்பு அதிகாரி அறிக்கை சமர்பித்துள்ளார். நெரிசலில் சிக்கி காயம் அடைந்த 30 பயணிகளிடம் வாக்குமூலம் பெறப்பட்டு இந்த அறிக்கையானது சமர்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல், நெரிசலின் போது அங்கிருந்த சிசிடிவி வீடியோ காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. 

மேற்கு ரயில்வே மேலாளரிடம் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், கனமழை ஏற்பட்டதே ரயில் நிலைய நடைமேம்பாலத்தில் ஏற்பட்ட திடீர் நெரிசலுக்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திடீர் மழை பெய்ததால், டிக்கெட் கவுண்டர்களில் நின்று கொண்டிருந்த பயணிகள், மழையில் நனையாமல் இருப்பதற்காக நடைமேம்பாலத்தில் குவிந்ததாகவும், ஏற்கனவே, படிக்கட்டுகளில் மக்கள் அதிக அளவில் நின்று கொண்டிருந்ததால் நெரிசல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிக அளவு சுமை கொண்டு வந்த பயணிகள் நிலைகுலைந்ததும் நெரிசல் ஏற்பட ஒரு காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடைமேம்பாலத்தில் ஏற்பட்ட மின்சார பிரச்சினைதான் இந்த நெரிசல் ஏற்பட்டதற்கு காரணம் என்ற கூற்றை எந்த ஒரு பயணியும் ஆதரிக்கவில்லை எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பரிந்துரைகளை அளித்துள்ள விசாரணைக்குழு, பயணிகள் வருகை அதிகம் இருக்ககூடிய பரபரப்பான நேரங்களில் அதிக சுமையை பயணிகள் எடுத்துச்செல்வதை தடை செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வியாபாரிகள், உணவுப்பொருட்களை விற்பனை செய்வதற்காக பெரிய  பேஸ்கட்களை எடுத்துச்செல்வதையும் பரப்பரப்பான நேரங்களில் தடுக்கப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  நடமேடைக்கான படிக்கட்டுகளை விரிவுபடுத்துதல், பயணிகள் டிக்கெட் புக் செய்யும் இடத்தை மாற்றியமைத்தல், கூடுதல் படிக்கட்டுகள் அமைத்தல், ரயில் நிலையத்தின் ஊழியர்களுக்கு வயர்லஸ் கருவிகள் வழங்குதல் உள்ளிட்ட பரிந்துரைகளும் அதில் இடம் பெற்றுள்ளது. 

Next Story