கேரள மாநிலம் கன்னூரில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைச்சேர்ந்தவர் மீது தாக்குதல்


கேரள மாநிலம் கன்னூரில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைச்சேர்ந்தவர் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 11 Oct 2017 10:39 AM GMT (Updated: 11 Oct 2017 10:39 AM GMT)

கேரள மாநிலம் கன்னூரில் ஆர்.எஸ்.எஸ் இயக்க தொண்டர் மீது தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னூர், 

கேரள மாநிலம் கன்னூரில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைசேர்ந்தவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் காயம் அடைந்தார். அதேபோல், பாரதீய ஜனதா அலுவலகம் மீதும் வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது. 

இருவேறு இடங்களில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:- “கன்னூர் மாவட்டத்தில் உள்ள தலசேரி பகுதியில் ஆட்டோ டிரைவராக பணியாற்றி வருபவர் எம்.கே சுரேஷ். இவர் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திலும் உறுப்பினராக உள்ளார். எம்.கே சுரேஷ் மீது  அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய தாக்குதலில் காயம் அடைந்தார். காயம் அடைந்த எம்.கே சுரேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் எதிர்ப்பு காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருக்க கூடும் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தாக்குதல் நடத்தியவர்களை தேடி வருகின்றனர். 

மற்றொரு சம்பவமாக பட்யம் பகுதியில் உள்ள பாரதீய ஜனதா அலுவலகம் மீது வெடி குண்டு வீசப்பட்டுள்ளது. நள்ளிரவு 12.30 மணியளவில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் அதிருஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அலுவலகத்தில் உள்ள சில பொருட்கள் மட்டும் சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பாஜக நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைச்சேர்ந்தவர் சிபிஐ(எம்) தொண்டர் மீது நாட்டு வெடி குண்டு வீசி தாக்குதல்  நடத்தியதாக குற்றம் சாட்டி சிபிஐ(எம்) கட்சி சார்பில் நேற்று முன் தினம் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், மேற்கண்ட சம்பவம் நடைபெற்றுள்ளது கவனிக்கத்தக்கது.  கேரளாவில் இடதுசாரிகளின் வன்முறைகள் அதிகரித்து வருவதாக கூறி கடந்த அக்டோபர் 3 தேதி ஜன ரக்‌ஷா யாத்ரா என்ற பேரணியை பாரதீய ஜனதா துவங்கியது நினைவிருக்கலாம். 

Next Story