காஞ்சீபுரம் கோவிலில் பிச்சை எடுத்த ரஷிய பயணி: நிச்சயமாக உதவிசெய்யப்படும் சுஷ்மா சுவராஜ் தகவல்


காஞ்சீபுரம் கோவிலில் பிச்சை எடுத்த ரஷிய பயணி:  நிச்சயமாக உதவிசெய்யப்படும் சுஷ்மா சுவராஜ் தகவல்
x
தினத்தந்தி 11 Oct 2017 11:04 AM GMT (Updated: 11 Oct 2017 11:04 AM GMT)

காஞ்சீபுரம் கோவிலில் பிச்சை எடுத்த ரஷிய பயணிக்கு நிச்சயமாக உதவிசெய்யப்படும் என வெளியுறத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

காஞ்சீபுரத்தில் பிரசித்தி பெற்ற குமரக்கோட்டம் முருகன் கோவில் உள்ளது. அப்போது கோவில் வாசலில் வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் பிச்சை எடுத்துக்கொண்டு இருந்தார்.  தரையில் அமர்ந்து தனது தொப்பியை வைத்து பிச்சை எடுத்துக்கொண்டு இருந்த அவரை அங்கு வந்த பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். அப்போது அந்த வாலிபர் “நான் இந்தியாவை சுற்றிப்பார்க்க வேண்டும். என்னிடம் பணம் இல்லை. பண உதவி செய்யுங்கள்” என சைகை மூலம் தெரிவித்தார்.

இதுகுறித்து பக்தர்கள் சிலர் பெரிய காஞ்சீபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் கோவிலுக்கு விரைந்து வந்த போலீசார் அந்த வாலிபரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

அப்போது அவர் ரஷிய நாட்டை சேர்ந்த எவிக்மி என்பதும், அவரது ஏ.டி.எம். கார்டு முடக்கப்பட்டதால் அவரால் பணம் எடுக்க முடியவில்லை என்பதும் எனவே அவர் பணத்தேவைக்காக கோவில் வாசலில் பிச்சை எடுத்ததும் தெரியவந்தது.

எவிக்மியின் பாஸ்போர்ட், விசா ஆகியவற்றை போலீசார் சரிபார்த்தனர். அவரிடம் அதுதொடர்பான முறையான ஆவணங்கள் இருந்தது.  தொடர்ந்து அவரை சென்னைக்கு ரெயிலில் ஏற்றி விட்டு அங்குள்ள தூதரக அதிகாரிகளை சந்திக்கும்படி அறிவுறுத்தி அனுப்பினர். 

இந்நிலையில்,  இது குறித்து தகவல் அறிந்த சுஷ்மா சுவராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

ரஷ்யா இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடு. ரஷிய நாட்டை சேர்ந்த எவிக்மிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் சென்னையில் உள்ள அதிகாரிகள் செய்வார்கள்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story