இமாசலபிரதேச சட்டசபை தேர்தலில் 74 சதவீத ஓட்டுப்பதிவு டிசம்பர் 18-ந் தேதி வாக்கு எண்ணிக்கை

இமாசலபிரதேச சட்டசபை தேர்தலில் 74 சதவீத வாக்குகள் பதிவாகின. அடுத்த மாதம் 18-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.
சிம்லா,
இமாசலபிரதேசத்தில் முதல்-மந்திரி வீரபத்ர சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், நேற்று அங்கு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. காலை 8 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் ஓட்டுப்பதிவு தொடங்கியது.
மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். முதல்-மந்திரி வீரபத்ர சிங், ராம்பூர் தொகுதியிலும், பா.ஜனதாவின் முதல்-மந்திரி வேட்பாளர் பிரேம் குமார் துமல் சமிர்புர் தொகுதியிலும் ஓட்டு போட்டனர்.
சிர்மார், சோலன், பிலாஸ்பூர், சிம்லா ஆகிய மாவட்டங்களில் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களில் சிறு கோளாறு ஏற்பட்டதால், ஓட்டுப்பதிவு சற்று நேரம் தடைபட்டது. இருப்பினும், அதன்பிறகு விறுவிறுப்பாக நடைபெற்றது.
இணையதளம் மூலம் கண்காணிப்பு
மாநிலத்தில் ஓட்டுப்போட தகுதி பெற்ற வாக்காளர்கள் 50 லட்சத்து 25 ஆயிரத்து 941 பேர் ஆவர். 7 ஆயிரத்து 525 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. பாதுகாப்பு பணியில் 17 ஆயிரத்து 850 போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினரும், 65 கம்பெனி துணை ராணுவப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டனர்.
337 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 62 பேர் தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் ஆவர். இந்த தேர்தலில்தான், யாருக்கு ஓட்டுப்போட்டோம் என்பதை தெரிவிக்கும் ஒப்புகை சீட்டு எந்திரங்கள் முதல்முறையாக பயன்படுத்தப்பட்டன. 2,307 வாக்குச்சாவடிகளில் இணையதளம் மூலம் ஓட்டுப்பதிவு நேரடியாக கண்காணிக்கப்பட்டது.
74 சதவீத ஓட்டுப்பதிவு
ஓட்டுப்பதிவின்போது, மாநிலத்தில் எந்த இடத்திலும் வன்முறை சம்பவங்களோ, முறைகேடுகளோ நடந்ததாக தகவல் இல்லை. மாலை 5 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிவடைந்தது. 74 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் கமிஷன் அதிகாரபூர்வமாக அறிவித்தது. வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன், மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள், அந்தந்த ஓட்டு எண்ணும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டன.
குஜராத் சட்டசபை தேர்தலும் முடிவடைந்த பிறகு, அடுத்த மாதம் 18-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. எனவே, தேர்தல் முடிவுகளை தெரிந்துகொள்ள இமாசலபிரதேச மக்கள் ஒரு மாதத்துக்கு மேல் காத்திருக்க வேண்டி உள்ளது.
Related Tags :
Next Story