டெல்லியில் வாகன இயக்கத்துக்கான கட்டுப்பாடு திட்டம் ரத்து

டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்திய பகுதிகளில் கடுமையான காற்று மாசு நிலவி வருகிறது.
புதுடெல்லி,
டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்திய பகுதிகளில் கடுமையான காற்று மாசு நிலவி வருகிறது. காற்றில் நுண்துகள்களின் அளவு பல மடங்கு அதிகரித்து உள்ளதால் எங்கு பார்த்தாலும் புகைமூட்டமாக காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்த மாசுபாட்டை போக்க மாநில அரசு கடும் நடவடிக்கையில் இறங்கி உள்ளது. இதன் ஒரு பகுதியாக டெல்லியில் வாகன இயக்கத்துக்கு கட்டுப்பாடு விதிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி வாகனங்களை ஒற்றைப்படை, இரட்டைப்படை பதிவு எண் முறைவைத்து இயக்க திட்டமிடப்பட்டது.
நாளை (திங்கட்கிழமை) முதல் 17–ந்தேதி வரை அமல்படுத்த திட்டமிட்டு இருந்த இந்த முறையில் இருந்து பெண்கள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு விலக்கு அளிக்க தீர்மானிக்கப்பட்டது. ஆனால் இவ்வாறு விலக்கு அளிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் மறுத்து விட்டது.
இதைத்தொடர்ந்து நேற்று முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் நடந்த மாநில அரசின் அவசரக்கூட்டத்தில், ஒற்றைப்படை, இரட்டைப்படை பதிவு எண் முறையிலான வாகன இயக்க திட்டத்தை ரத்து செய்வது என முடிவு செய்யப்பட்டது. இந்த தகவலை தெரிவித்த மாநில போக்குவரத்து மந்திரி கைலாஷ் கெலாட், இது தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தை மீண்டும் நாட இருப்பதாக கூறினார்.