ரூ. 5 கோடி ரொக்கம் கொடுத்து 8 சொகுசுகார்களை வாங்கிய சுகேஷ் யாருக்கு வாங்கினார்?


ரூ. 5 கோடி ரொக்கம் கொடுத்து 8 சொகுசுகார்களை வாங்கிய சுகேஷ் யாருக்கு வாங்கினார்?
x
தினத்தந்தி 15 Nov 2017 9:04 AM GMT (Updated: 15 Nov 2017 9:04 AM GMT)

5 கோடி ரூபாய்க்கு அதிகமாக ரொக்கமாக பணம் செலுத்தியதின் மூலம் சில ஆடம்பர வாகனங்களை சுகேஷ் வாங்கியதாகக் கண்டறியப்பட்டு உள்ளது.


திருவனந்தபுரம்

இரட்டை இலை சின்னம்  பெற தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்த வழக்கில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார்.அவர் தற்போது டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப் பட்டுள்ளார்.

சுகேஷ் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் அ.தி.மு.க. அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கைதானார். பின்னர் அவர் ஜாமீ னில் விடுதலையானார்.கார் தரகரான சுகேஷ் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட சொகுசு கார்களை பல்வேறு முக்கிய பிரமுகர்களுக்கு விற்பனை செய்து வந்தார். அவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.

விசாரணை கைதியான அவரை கடந்த மாதம் 9ந்தேதி டெல்லி போலீசார் பெங்களூர்  அழைத்து வந்தனர். அப்போது போலீசாரின் ஒத்துழைப்புடன் சுகேஷ் பெங்களூரில் சுதந்திரமாக சுற்றி திரிந்ததாக டெல்லி போலீஸ் கமிஷனரிடம் வருமான வரித்துறை தெரிவித்தது. இது தொடர்பாக 7 போலீசார் சஸ்பெண்டு செய்யப்பட்டு இருந்தனர்.

இந்நிலையில் கடந்த 8, 10 தேதிகளில் கர்நாடகா வருமான வரித்துறை அதிகாரிகள் கொச்சியில் அதிரடி சோதனை நடத்தினர். சுகேஷின் முக்கிய கூட்டாளி நவாஸை இலக்கு வைத்து இந்த சோதனை நடத்தப்பட்டது. அப்போது வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவருக்குச் சொந்தமான இடத்தில் நவாஸ் சொகுசு கார்களை பதுக்கி வைத்திருப்பதாக வருமான வரித்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் 8 சொகுசு கார்கள் மற்றும் ஒரு ஸ்போர்ட்ஸ் பைக் ஆகியவற்றைக் கைப்பற்றினர்.

லம்போர்கினி, ரோல்ஸ் ராய்ஸ், ரேஞ்ச் ரோவர், பிஎம்டபிள்யூ, பார்ச்சுனர், பிராடோ, இன்னோவா மற்றும் டூகாட்டி பைக் (இரு சக்கர வாகனங்கள்) ஆகியவற்றை மீட்கப்பட்டதாக வருமான வரித்துறை வட்டாரங்கள்  உறுதிப்படுத்தியுள்ளன.இந்த ஆண்டு அக்டோபரில் ஒரு சோதனை நடத்தப்பட்டபோது பென்ட்லி மற்றும் ஒரு ஜாகுவார் முன்னதாக பறிமுதல் செய்யப்பட்டன.

 வருமான வரித்துறை ஆதாரங்கள் படி 5 கோடி ரூபாய்க்கு அதிகமாக முதலீடு செய்து, ரொக்கமாக பணம் செலுத்தியதின் மூலம் சில ஆடம்பர வாகனங்களை வாங்கியதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த சொகுசு கார்கள் சுகேஷூக்கு சொந்தமானவையா? அல்லது வேறு யாருக்காகவும் சுகேஷ் வாங்கி பதுக்கி வைத்திருந்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் வருமான வரித்துறை சோதனையில் சிக்கிய சசிகலா குடும்பமும் சொகுசு கார் இறக்குமதி விவகாரத்தில் சிக்கியிருக்கிறது.

Next Story