குர்மீத் ராம்ரகீமுக்கு எதிராக பொய் வாக்குமூலம் கூற வற்புறுத்தப்பட்டேன்; பெண் குற்றச்சாட்டு

குர்மீத் ராம்ரகீம் சிங்கிற்கு எதிராக பொய்யான வாக்குமூலம் கூற வற்புறுத்தப்பட்டேன் என பெண் ஒருவர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம்ரகீம் சிங். இவர் மீது 2002ம் ஆண்டு கற்பழிப்பு புகார் ஒன்று தெரிவிக்கப்பட்டது. அதில், இரு பெண் சீடர்களை அவர் கற்பழித்துள்ளார் என குற்றச்சாட்டு கூறப்பட்டு இருந்தது. இந்த வழக்கு இந்த வருடம் ஆகஸ்டில் விசாரணைக்கு வந்தது. முடிவில், இரு கற்பழிப்பு வழக்குகளில் தலா 10 வருடம் என ரகீமுக்கு 20 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
சிர்சா நகரின் பத்திரிக்கையாளர் ராம் சந்தர் சத்ரபதி மற்றும் தேரா அமைப்பின் முன்னாள் மேலாளர் ரஞ்சித் சிங்.
கடந்த 2002ம் ஆண்டு தேரா அமைப்பிற்குள் நடந்த குற்ற செயல்களை வெளிப்படுத்திய நிலையில் ராம்சந்தரும் மற்றும் பாலியல் முறைகேடு குற்றச்சாட்டுகள் அடங்கிய கடிதத்தினை வெளியிட்ட சந்தேகத்தில் ரஞ்சித்சிங்கும் கொலை செய்யப்பட்டனர். 2 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் விசாரணை இறுதி கட்டத்தில் உள்ளது.
இந்த வழக்குகளில் ராம்ரகீமுக்கு எதிராக அவரது முன்னாள் டிரைவர் கட்டா சிங் வாக்குமூலம் அளிக்க மனு செய்துள்ள நிலையில், கட்டா சிங்கின் மருமகள் சுமீந்தர் கவுர் புதிய குற்றச்சாட்டினை கூறியுள்ளார். அதில், ராம்ரகீமுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை கூறும்படி கட்டா சிங் என்னை வற்புறுத்தினார் என கூறியுள்ளார்.
தேரா புகழை குலைக்க கட்டா சிங் திட்டமிடுகிறார். என்னை இதில் தொடர்புப்படுத்த முயன்றார். அதற்கு நான் உடன்படவில்லை. அதனால் மிரட்டப்பட்டேன். அடித்து துன்புறுத்தப்பட்டேன். என்னை கடத்துவதற்கும் கட்டா முயற்சி செய்துள்ளார் என செய்தியாளர்கள் சந்திப்பில் கவுர் கூறியுள்ளார்.