குருவாயூரில் மதம் பிடித்ததால் கோவில் யானைகள் ரகளை

குருவாயூரில் மதம் பிடித்ததால் கோவில் யானைகள் ரகளை ஈடுபட்டதால் பாகன் உள்பட 2 பேர் காயம் அடைந்தனர்.
குருவாயூரில்,
கேரள மாநிலம் குருவாயூரில் பிரசித்திப்பெற்ற கிருஷ்ணர் கோவில் உள்ளது. இங்கு தினமும் காலையில் அலங்கரிக்கப்பட்ட யானையின் மூலம் சாமி கிருஷ்ணரின் சிலை பூஜைக்கு எடுத்துச்செல்லப்படும்.
அந்த வகையில் நேற்று காலை கோவிலுக்குள் அலங்கரிக்கப்பட்ட யானைகள் அணிவகுத்து நின்றன. அவற்றில் ஒரு யானையின் மீது கிருஷ்ணர் சிலை வைக்கப்பட்டு பூஜைக்கு எடுத்து செல்ல தயார் செய்யப்பட்டது. அப்போது அங்கு நின்றுக்கொண்டிருந்த ஒரு யானைக்கு திடீரென மதம் பிடித்தது. இதனால் அந்த யானை அங்கும் இங்குமாக ஓடி அட்டகாசம் செய்தது. தொடர்ந்து மற்ற 2 யானைகளுக்கும் மதம் பிடித்தது.
3 யானைகளும் கடும் ரகளையில் ஈடுபட்டன. ஒவ்வொரு யானையும் ஒவ்வொரு திசைக்கு ஓட்டம் பிடித்தன. விடுமுறை தினம் என்பதாலும், சபரி மலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் அதிக அளவில் வந்ததாலும் நேற்று கோவிலில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கோவில் யானைகளுக்கு மதம் பிடித்ததை பார்த்ததும் பக்தர்கள் இடையே பதற்றமும், பீதியும் தொற்றிக்கொண்டது. இதனால் அவர்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓட்டம் பிடித்தனர்.
இதற்கிடையே மதம் பிடித்த யானைகளில் ஒன்று பாகனை கடுமையாக தாக்கியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். மற்றொரு யானை தாக்கியதில் பெண் பக்தர் ஒருவர் காயம் அடைந்தார்.
சிறிது நேரத்திற்கு பின்னர் 3 யானைகளும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டன. காயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story