குஜராத், இமாச்சல பிரதேசத்தில் பா.ஜனதா வெற்றி பெறும் என கருத்துக்கணிப்புகளில் தகவல்

குஜராத் சட்டசபைத் தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றியின் விளிம்பில் உள்ளதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆமதாபாத்,
182 உறுப்பினர்களை கொண்ட குஜராத் சட்டசபைக்கு டிசம்பர் 9, 14–ந் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி 89 தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தல் கடந்த 9–ந்தேதி நடந்தது. அதில் சுமார் 68 சதவீதம் வாக்குகள் பதிவானது. இந்த நிலையில் எஞ்சிய 93 தொகுதிகளுக்கு 2–வது மற்றும் இறுதிக்கட்டமாக தேர்தல் இன்று நடந்தது. மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவுப்பெற்றது. மாலை 4 மணிவரையில் 62.24 சதவித வாக்குகள் பதிவாகியது.
தேர்தலுக்கு பின்னர் வெளியாகி உள்ள கருத்துக்கணிப்பில் பா.ஜனதா வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
'ஏபிபி - சிஎஸ்டிஎஸ்' என்ற அமைப்பு இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பு தகவல் வெளியிடப்பட்டு உள்ளது. அதில் பாரதீய ஜனதா 91 தொகுதிகள் முதல் 99 தொகுதிகள் வரையில் வெற்றிபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. காங்கிரஸ் 78 முதல் 86 வரையிலான தொகுதியை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
டைம்ஸ் நவ் மற்றும் விஎம்ஆர் கருத்துக்கணிப்பில் பா.ஜனதா 109 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும் காங்கிரஸ் 70 தொகுதிகளை கைப்பற்றும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ரிபப்ளிக் - ஜான் கி பாத் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் பா.ஜனதா 108 தொகுதிகளை கைப்பற்றும் எனவும், காங்கிரஸ் 74 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இமாச்சல பிரதேசம்
68 தொகுதிகள் கொண்ட இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஆட்சி அமைக்க 35 உறுப்பினர்களின் எண்ணிக்கை தேவையானது. தேர்தலில் பாரதீய ஜனதா அமோக வெற்றியை தனதாக்கும் என கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியா டுடே வெளியிட்டு உள்ள கருத்துக்கணிப்பு தகவல்களில் இமாச்சல பிரதேசத்தில் பாரதீய ஜனதா 47-55 தொகுதியை கைப்பற்றும் எனவும் காங்கிரஸ் 13-20 தொகுதிகளை கைப்பற்றும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இமாச்சல பிரதேசத்தில் பா.ஜனதாவிற்கு மிகப்பெரிய வெற்றி இருக்கும் என கருத்துக்கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆங்கில ஊடகங்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் எல்லாம் பா.ஜனதா வெற்றி பெறும் என்றே தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கருத்துக்கணிப்புகள் உண்மையாகும் வகையில் இருமாநிலங்களிலும் பா.ஜனதா வெற்றியை தனதாக்கினால் காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்திக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும்.
Related Tags :
Next Story