குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்க சரத்யாதவுக்கு அனுமதி மறுப்பு

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்க சரத்யாதவுக்கு டெல்லி ஐகோர்ட்டு அனுமதி மறுத்து உள்ளது.
புதுடெல்லி,
ஐக்கிய ஜனதாதளத்தின் முன்னாள் தலைவர் சரத்யாதவை டெல்லி மேல்–சபை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து கடந்த 4–ந் தேதி அக்கட்சியின் டெல்லி மேல்–சபை தலைவர் ராம்சந்திர பிரசாத் சிங் உத்தரவிட்டார். இதற்கு தடை விதிக்கக்கோரி சரத்யாதவ் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி விபு பாக்ரு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த வழக்கில் இடைக்கால தடை உத்தரவு எதையும் நீதிபதி பிறப்பிக்கவில்லை. அதே நேரம், எம்.பி. என்கிற முறையில் சரத்யாதவ் அலவன்சுகளையும், சலுகைகளையும் பெற்றுக் கொள்ளலாம் எனவும், தனக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களாவில் அவர் தொடர்ந்து வசிக்கலாம் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.
ஆனால், தற்போது நடந்து வரும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் சரத்யாதவ் பங்கேற்க அனுமதி வழங்க மறுத்த நீதிபதி, வழக்கு விசாரணையை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 1–ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.
இந்த வழக்கில் டெல்லி மேல்–சபை தலைவர் மற்றும் ராம்சந்திர பிரசாத் சிங் ஆகியோர் பதில் அளிக்கும்படியும் நீதிபதி உத்தரவிட்டார்.