ஓகி புயல் பாதிப்பு அறிக்கையை மத்திய அரசுக்கு சமர்ப்பிக்கிறது தமிழக அரசு

ஓகி புயல் பாதிப்பு குறித்து அறிக்கையை இன்று மத்திய அரசுக்கு தமிழக அரசு சமர்ப்பிக்கிறது.
சென்னை,
குமரி மாவட்டத்தில் கடந்த 30-ந்தேதி வீசிய ஒகி புயல் பேரிழப்பை ஏற்படுத்தியது. மழை பெய்தபோது வீடு இடிந்தும், மரம் முறிந்தும், மின்கம்பங்கள் சாய்ந்ததிலும் மாவட்டம் முழுவதும் 11 பேர் பலியானார்கள்.
கடற்கரை கிராமங்களை கலங்க வைத்த ஒகி புயல் விவசாய நிலங்களையும் விட்டு வைக்கவில்லை. சூறாவளியாய் சுழன்றடித்த காற்று தென்னை, ரப்பர், தேக்கு, வாழை மரங்களை வேரோடும், வேரடி மண்ணோடு சாய்த்தது. வரப்புக்கு மேல் வளர்ந்து நின்ற நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி அழுகின.
ஒகி புயலில் பலியான விவசாயிகள் மற்றும் பொது மக்களின் குடும்பத்தாருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும், நாசமான பயிர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகளும், பல்வேறு அமைப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கன்னியாகுமரியில் ஓகி புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய சிறப்பு அதிகாரிகளை தமிழக அரசு நியமித்தது. இந்த குழு ஓகி புயல் பாதிப்பு குறித்த ஆய்வு செய்த அறிக்கையை தமிழக அரசிடம் சமர்பித்தது.
குமரி மாவட்டத்தில் ஆய்வு செய்த சிறப்பு அதிகாரிகளின் அறிக்கை குறித்து முதல்-அமைச்சர் தலைமையிலான ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் தொடங்கியது. ஆலோசனையை தொடர்ந்து அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அறிக்கையில் தமிழகத்திற்கு தேவையான நிவாரண நிதியும் கோரப்பட உள்ளது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார் மற்றும் அரசு துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
Related Tags :
Next Story