குஜராத் தேர்தல் பெரும்பான்மையை விட அதிக இடங்களில் வெற்றி பெற்று பாரதீயஜனதா மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது


குஜராத் தேர்தல் பெரும்பான்மையை விட அதிக இடங்களில்  வெற்றி பெற்று பாரதீயஜனதா மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது
x
தினத்தந்தி 18 Dec 2017 6:15 AM GMT (Updated: 18 Dec 2017 7:53 AM GMT)

குஜராத் தேர்தல் பெரும்பான்மையைவிட அதிக இடங்களில் வெற்றி பெற்று பாரதீயஜனதா மீண்டும் ஆட்சியை 6-வது முறையாக பிடிக்கிறது.

ஆமதாபாத்,

குஜராத் மாநில சட்ட சபைக்கு கடந்த 9 மற்றும் 14-ந்தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடந்தது. இரண்டு கட்ட தேர்தலையும் சேர்த்து சராசரியாக 68.41 சதவீத ஓட்டுகள் பதிவானது.

இன்று (திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. குஜராத்தின் 33 மாவட்டங்களில் 37 இடங்களில் மையங்கள் உருவாக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் ஓட்டு எண்ணிக்கை நடந்தது.

ஓட்டுப்பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் அனைத்தும் குஜராத்தில் பா.ஜ.க. அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கூறி இருந்தன. ஆனால் அந்த கருத்துக் கணிப்புகள் அனைத்தும் அப்படியே நிஜமாகவில்லை.

8.05 மணிக்கு முதல் முன்னிலை வந்தது. முதலில் பா.ஜ.க. முன்னிலை பெற்றது. காலை 8.15 மணி நிலவரப்படி பாரதீய ஜனதா கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றிருந்தது.

காலை 8.30 மணி நிலவரப்படி பா.ஜ.க. 60 இடங்களில் வெற்றி வாய்ப்புடன் முன்னிலை பெற்றிருந்தது. காங்கிரஸ் கட்சி 24 இடங்களுடன் பின்தங்கி இருந்தது. இரு கட்சிகளுக்கும் இடையே 20 இடங்கள் முதல் 30 இடங்கள் வரை வித்தியாசம் காணப்பட்டது. இதே அளவு பா.ஜ.க. முன்னிலை சுமார் 45 
நிமிடங்களுக்கு நீடித்தது.

9 மணிக்கு குஜராத் தேர்தல் முடிவு முன்னிலையில் மாற்றம் ஏற்பட்டது. பின் தங்கி இருந்த காங்கிரஸ் கட்சி மளமளவென அதிக இடங்களில் முன்னிலை பெற்றது. தேர்தல் முடிவுகளை தொலைக்காட்சிகளில் பார்த்துக் கொண்டிருந்த காங்கிரசாருக்கு அது இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

அதே சமயத்தில் பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் அதிர்ச்சியில் விக்கித்துப் போனார்கள். 9.20 மணி நிலவரப்படி பா.ஜ.க.வை விட 10 இடங்கள் அதிகம் பெற்று காங்கிரஸ் முன்னிலைக்கு வந்தது. இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் புத்துணர்ச்சியும் உற்சாகமும் அடைந்தனர். பட்டாசுகளை வெடிக்கத் 
தொடங்கினார்கள்.

பா.ஜ.க. - காங்கிரஸ் இரு கட்சிகளும் சமமான நிலைக்கு வந்தன. நிமிடத்துக்கு நிமிடம் இரு கட்சிகளும் மாறி, மாறி முன்னிலை பெற்றன. இதனால் குஜராத்தில் ஆட்சி அமைக்கப் போவது பாரதீய ஜனதா கட்சியா? அல்லது காங்கிரஸ் கட்சியா? என்பதில் இழுபறி ஏற்பட்டது.

9.40 மணிக்கு முன்னிலை நிலவரத்தில் மீண்டும் ஒரு தடவை மாற்றம் ஏற்பட்டது. இந்த தடவை பாரதீய ஜனதா கட்சி சுமார் 10 இடங்கள் காங்கிரசை விட கூடுதலாக பெற்று முன்னிலை பெற்றது.

அதாவது மொத்தம் உள்ள 182 இடங்களில் பா.ஜ.க. 93 இடங்களில் முன்னிலைப் பெற்றிருந்தது. காங்கிரஸ் கட்சி 86 இடங்களில் வெற்றி வாய்ப்புடன் இருந்தது. இதன் காரணமாக குஜராத் தேர்தல் முடிவுகளில் கடும் விறுவிறுப்பு காணப்பட்டது.

10 மணி அளவில் 182 தொகுதிகளின் முன்னிலை நிலவரம் தெரிந்தது. அப்போது பாரதீய ஜனதா கட்சி 103 இடங்களில் முன்னிலை பெற்றிருந்தது. காங்கிரஸ் கட்சி 74 இடங்களில் முன்னிலையில் இருந்தது.

குஜராத்தில் ஆட்சி அமைக்க 92 இடங்கள் வேண்டும். இந்த இலக்கை பாரதீய ஜனதா கட்சி கடும் போராட்டத்துக்குப் பிறகு எட்டிப்பிடித்தது. இதன் மூலம் பாரதீய ஜனதா கட்சி குஜராத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது.

குஜராத்தில் இதுவரையிலான வாக்கு சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. குஜராத்தில் பாரதிய ஜனதா கட்சி 49 சதவீதமும், காங்கிரஸ் கட்சி 41.6 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது. நாடாளுமன்றம் வந்த பிரதமர் மோடி (இரட்டை விலை ) வெற்றிக்கான சின்னத்தை காண்பித்து கையசைத்து  சென்றார்.

குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி மேற்கு ராஜ்கோட் தொகுதியில் முதலில் பின்தங்கி  தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்று உள்ளார்.

குஜராத் மாநிலத்தில் கடந்த 22 ஆண்டுகளாக பாரதீய ஜனதா கட்சி ஆட்சியில் உள்ளது. 1990-ம் ஆண்டு ஜனதாதளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்ததையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் குஜராத்தில் பாரதீய ஜனதா கட்சி 27 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் உள்ளது.

1995-ம் ஆண்டு முதல் பா.ஜ.க. குஜராத்தின் தன்னிகரற்ற தனிப்பெரும்பான்மை பலம் மிக்க கட்சியாக திகழ்ந்து வருகிறது. 1995, 1998, 2002, 2007 மற்றும் 2012-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தலில் தொடர்ச்சியாக  பா.ஜ.க. 5 தடவை வென்று ஆட்சி அமைத்திருந்தது.

தற்போது பா.ஜ.க. குஜராத்தில் 6-வது முறையாக தொடர்ச்சியான வெற்றியை ருசித்துள்ளது. இந்த தடவை பா .ஜ.க.வுக்கு கிடைத்த இடங்கள் சற்று குறைந்தாலும் ஆட்சி அதிகார மகுடத்தை அது இழக்கவில்லை. குஜராத் என்றால் பா.ஜ.க. என்ற நிலையை பா.ஜ.க. மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

Next Story