ஓகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட நாளை கேரளா-குமரி வருகிறார் பிரதமர் மோடி


ஓகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட நாளை கேரளா-குமரி வருகிறார் பிரதமர் மோடி
x
தினத்தந்தி 18 Dec 2017 1:55 PM GMT (Updated: 18 Dec 2017 1:55 PM GMT)

ஓகி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டம், கேரள கடலோர பகுதிகளை பிரதமர் மோடி நாளை பார்வையிடுகிறார்.

புதுடெல்லி,

அரபிக்கடலில் உருவான ‘ஒகி’ புயல் கடந்த 30–ந்தேதி தமிழகத்தின் குமரி மாவட்டம் மற்றும் கேரள கடலோர பகுதிகளை கடுமையாக தாக்கியது. இதில் குமரி மாவட்டம் கடும் பாதிப்புக்குள்ளானதுடன், கேரள கடலோர பகுதிகளும் பெரும் சேதங்களை சந்தித்தன. குமரி மற்றும் கேரள கடற்கரை பகுதிகளில் இருந்து மீன்பிடிக்க சென்ற பல மீனவர்கள் உயிரிழந்தனர். ஏராளமானோர் மாயமாகி உள்ளனர்.

இந்த பிராந்தியங்களை உருக்குலைத்த ‘ஒகி’ புயல் பின்னர் லட்சத்தீவிலும் தனது கொடூர முகத்தை காட்டியது. அங்கும் பல பகுதிகள் புயலுக்கு இரையாகி உள்ளன. அங்கும் கடற்கரை பகுதிகள் சின்னாபின்னமாகி விட்டன.

இந்த நிலையில் புயல் தாக்கிய பகுதிகளை பார்வையிடவும், பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காகவும் பிரதமர் நரேந்திர மோடி நாளை குமரி மாவட்டம் மற்றும் கேரளா, லட்சத்தீவு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

இதற்காக இன்று நள்ளிரவில் விமானம் மூலம் அவர் மங்களூருவுக்கு வருகிறார்.

பின்னர் அங்கிருந்து நாளை காலை 7.35 மணிக்கு லட்சத்தீவுக்கு உட்பட்ட அகாத்தி தீவுக்கு சென்று, அங்கு புயலால் விளைந்த சேதங்களை பார்வையிடுகிறார்.  பின்னர் அவர் விமானம் மூலம் பிற்பகலில் திருவனந்தபுரம் வருகிறார். அங்கிருந்து நேராக குமரி மாவட்டத்துக்கு செல்லும் பிரதமர் மோடி, அங்கு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.

அதைத்தொடர்ந்து மீண்டும் திருவனந்தபுரம் செல்லும் பிரதமர், அங்கு முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் அதிகாரிகளுடன் புயல் நிவாரண உதவிகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார். 

மேலும் அங்கு புயல் பாதித்த பகுதிகளையும் அவர் பார்வையிடுகிறார். பின்னர் இந்த நிகழ்ச்சிகளை முடித்து விட்டு விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார்.

ஒகி புயல் நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்காக ரூ 1,843 கோடி தேவை என  மத்திய அரசிடம் கேரளா அரசு கோரிக்கை வைத்துள்ளது. கேரளாவின் கோரிக்கையை ஏற்று, ஆய்வு மேற்கொள்ள மத்திய குழுவை அனுப்புவதாக உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

கேரளாவில் ஓகி புயலால் இதுவரை 70 பேர் உயிரிழந்ததாகவும், 105 பேரை காணவில்லை என கேரள அரசு கூறியுள்ளது.

Next Story