குஜராத் மாநில சட்டமன்ற தலைவரை தேர்வு செய்ய பா.ஜனதா கண்காணிப்பு குழு நியமனம்


குஜராத் மாநில சட்டமன்ற தலைவரை தேர்வு செய்ய பா.ஜனதா கண்காணிப்பு குழு நியமனம்
x
தினத்தந்தி 18 Dec 2017 3:43 PM GMT (Updated: 18 Dec 2017 3:43 PM GMT)

குஜராத் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற பாரதீய ஜனதா கட்சி, கட்சியின் சட்டசபைத் தலைவரை தேர்வு செய்ய குழுவை அமைத்து உள்ளது.


 புதுடெல்லி,


182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டசபை தேர்தலில் 99 தொகுதிகளை கைப்பற்றி, 6–வது முறையாக பா.ஜனதா வெற்றி பெற்றது. இமாசலபிரதேசத்தில் ஆட்சியை கைப்பற்றியது. இருமாநிலங்களிலும் பா.ஜனதா வெற்றியடைந்ததை அடுத்து அக்கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் இரு மாநிலங்களிலும் கட்சியின் சட்டமன்ற தலைவரை தேர்வு செய்யும் பணிக்கு பார்வை குழு அமைக்கப்பட்டது. கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் சேர்ந்து சட்டமன்றத் தலைவரை (முதல்-மந்திரி) தேர்வு செய்கிறார்கள். குஜராத் மாநிலத்திற்கு மத்திய நிதிமந்திரி அருண் ஜெட்லி மற்றும் பா.ஜனதா பொதுச்செயலாளர் சரோஜ் பாண்டே ஆகியோர் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். 

குஜராத்தில் ராஜ்கோட் மேற்கு தொகுதியில் போட்டியிட்ட மாநில முதல்–மந்திரி விஜய் ரூபானி 53,755 ஓட்டுகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் இந்திரானில் ராஜ்யகுருவை வீழ்த்தினார். குஜராத் மாநில தேர்தல் பிரசாரத்தின் போது விஜய் ரூபானியை முன்னிறுத்தியே பா.ஜனதா தேர்தலை சந்திக்கும் என அமித்ஷா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெற்றாலும், பா.ஜனதாவின் முதல்–மந்திரி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிரேம்குமார் துமால் சுஜான்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராஜிந்தர் ரானாவிடம் தோல்வியை தழுவினார். பாரதீய ஜனதாவின் முதல்-மந்திரி வேட்பாளர் தோல்வியை தழுவினால் யாரை முதல்-மந்திரியாக நியமனம் செய்வீர்கள்? என அமித் ஷாவிடம் கேள்வி எழுப்பட்டது. அதற்கு கட்சியின் பாராளுமன்ற நிலைக்குழு முடிவினை எடுக்கும் என கூறிவிட்டார். இமாச்சல பிரதேச மாநிலத்தில் கட்சியின் சட்டசபைத் தலைவரை தேர்வு செய்யும் பணியினை கண்காணிக்கும் பொறுப்பு பிரதமர் மோடி மற்றும் நிர்மலா சீதாராமனிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.


Next Story