குஜராத், இமாசலபிரதேச மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி


குஜராத், இமாசலபிரதேச மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி
x
தினத்தந்தி 19 Dec 2017 12:32 AM IST (Updated: 19 Dec 2017 12:33 AM IST)
t-max-icont-min-icon

குஜராத், இமாசலபிரதேச மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்று உள்ளது.

காந்தி நகர்,

182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டசபைக்கு கடந்த 9 மற்றும் 14-ந் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடந்தது. மொத்தம் 68.41 சதவீத ஓட்டுகள் பதிவானது.

இதேபோல் 68 உறுப்பினர்களைக் கொண்ட இமாசலபிரதேச சட்டசபைக்கு ஒரே கட்டமாக கடந்த மாதம் 9-ந் தேதி தேர்தல் நடத்தப்பட்டது.  இதில் 75.28 சதவீத ஓட்டுகள் பதிவானது.

இந்தநிலையில் தேர்தல் நடந்த இந்த 2 மாநிலங்களிலும் நேற்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. குஜராத்தில் தொடக்கத்தில் இருந்தே பா.ஜனதா முன்னிலை பெற்றது. நேரம் செல்லச் செல்ல பா.ஜனதா முன்னிலை பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்ததால் ஆட்சி அமைக்க தேவையான 92 தொகுதிகளை பா.ஜனதா கைப்பற்றும் நிலை உருவானது. எனினும் காங்கிரசும் பா.ஜனதாவை பின்னுக்கு விரட்டி வந்தது.

பா.ஜனதா 100 தொகுதிகளுக்கும் மேலாக முன்னிலை பெற்றபோது அது ஆட்சியை உறுதியாக கைப்பற்றிவிடும் என்பது தெளிவானது. இறுதியில் பா.ஜனதா 99 தொகுதிகளை வென்று மாநிலத்தில் தொடர்ந்து 6-வது முறையாக ஆட்சியை கைப்பற்றியது.

பா.ஜனதாவுக்கு கடும் சவால் அளித்த காங்கிரஸ் 77 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) ஒரு தொகுதியில் வென்றது. பாரதீய பழங்குடியினர் கட்சிக்கு 2 தொகுதிகளில் வெற்றி கிடைத்தது. சுயேச்சைகள் 3 இடங் களில் வெற்றி பெற்றனர்.

இமாசலபிரதேச மாநிலத்திலும் ஆரம்பத்தில் இருந்தே பா.ஜனதா முன்னிலை பெற்றது. ஆட்சி அமைக்க 35 இடங்கள் தேவை என்ற நிலையில் 40 தொகுதிகளுக்கும் மேலாக பா.ஜனதா வெற்றி முகத்தில் இருந்தது.

அனைத்து முடிவுகளும் அறிவிக்கப்பட்டபோது பா.ஜனதா 44 தொகுதிகளையும், காங்கிரஸ் 21 தொகுதிகளையும் கைப்பற்றி இருந்தன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒரு இடத்தையும், சுயேச்சைகள் 2 இடங்களையும் கைப்பற்றினர். 2007-ம் ஆண்டுக்கு பிறகு மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை பா.ஜனதா கைப்பற்றி உள்ளது.
1 More update

Next Story