புதிய மசோதாவை கண்டித்து டாக்டர்கள் இன்று வேலைநிறுத்தம் இந்தியா முழுவதும் போராட்டம்


புதிய மசோதாவை கண்டித்து டாக்டர்கள் இன்று வேலைநிறுத்தம் இந்தியா முழுவதும் போராட்டம்
x
தினத்தந்தி 2 Jan 2018 12:15 AM GMT (Updated: 1 Jan 2018 6:15 PM GMT)

புதிய மசோதாவை கண்டித்து, இந்தியா முழுவதும் டாக்டர்கள் இன்று வேலைநிறுத்தம் செய்கிறார்கள்.

சென்னை,

மருத்துவ கல்வி தொடர்பான பணிகளில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்கும் நோக்கத்தில், இந்த புதிய ஆணையத்தை மத்திய அரசு அமைக்க இருக்கிறது. இந்த ஆணையத்தின் தலைவரை மத்திய அரசு நியமிக்கும். உறுப்பினர்களை மத்திய மந்தரிசபை செயலாளர் தலைமையிலான தேர்வுக்குழு தேர்வு செய்யும்.

தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க வகை செய்யும் மசோதாவை மத்திய சுகாதார துறை மந்திரி ஜே.பி.நட்டா கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதா இன்று (செவ்வாய்க் கிழமை) விவாதத்துக்கு வருகிறது.

தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கு இந்திய மருத்துவ சங்கம் (ஐ.எம்.ஏ.) கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இந்த ஆணையம் மக்கள் நலனுக்கு எதிரானது என்றும், மருத்துவ, சுகாதார பணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக அமையும் என்றும் இந்த சங்கம் கூறி வருகிறது. இந்த சங்கத்தில் 2 லட்சத்து 77 ஆயிரம் டாக்டர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் இன்று (செவ்வாய்க்கிழமை) டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக இந்திய மருத்துவர் சங்கம் அறிவித்து உள்ளது.

இந்த வேலைநிறுத்த போராட்டம் குறித்து இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு கிளையின் தலைவர் டாக்டர் ஜெயலால், கவுரவ செயலாளர் டாக்டர் பி.ஸ்ரீதர் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மத்திய அரசு இந்திய மருத்துவ கவுன்சில் அமைப்பை கலைத்துவிட்டு தேசிய மருத்துவ ஆணையம் என்ற புதிய அமைப்பை உருவாக்க வகை செய்யும் மசோதாவை பாராளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்து இருக்கிறது. இந்த மசோதா, நவீனமுறை சிகிச்சைகளை 6 மாத பயிற்சி வகுப்புக்கு பிறகு அனைத்து வழிமுறை மருத்துவர்களும் செய்ய வழிவகுக்கிறது. மேலும் ஆணையத்தில் பிற துறைகளைச் சேர்ந்தவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் ஆட்சி துறை நிர்வாகிகள் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவதை ஊக்கப்படுத்துகிறது.

கடந்த ஆண்டு முதல் இந்திய மருத்துவர்கள் சங்கம் இதனை கடுமையாக எதிர்த்து வருகிறது. மேலும் சம்பந்தப்பட்ட மந்திரிகள் மற்றும் அதிகாரிகளுடன் பல சுற்று பேச்சு வார்த்தைகள் நடத்தி வந்துள்ளது. சங்கத்தின் வேண்டுகோளையும் மீறி தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க வகை செய்யும் மசோதாவை மத்திய அரசு நிறைவேற்ற முயற்சி செய்கிறது. எனவே இந்த முயற்சிக்கு எதிராக அகில இந்திய அளவில் வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி இந்தியா முழுவதும் உள்ள டாக்டர்கள் செவ்வாய்க்கிழமை (இன்று) காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை தங்களுடைய தினசரி பணியை புறக்கணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர். இந்த குறிப்பிட்ட நேரத்தில் எந்த ஒரு வழக்கமான பணிகளும் நடக்காது. என்றாலும் அவசர சிகிச்சை, பிரசவம் மற்றும் உள்நோயாளிகள் தொடர் சிகிச்சை ஆகியவை தடை இன்றி நடக்கும். டாக்டர்களின் இந்த போராட்டத்துக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

டாக்டர் ஜெயலால் கூறியதாவது:-

மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் ஜிப்மர், எய்ம்ஸ் ஆகிய மருத்துவ கல்வி நிறுவனங்களில் படித்த மாணவர்களை தவிர்த்து, எம்.பி.பி.எஸ். படித்து முடித்த பிற மாணவர்கள் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் டாக்டர்களாக பதிவு செய்ய முடியும். ஆனால் வெளிநாடுகளில் படித்தவர்களுக்கு அந்த நுழைவுத்தேர்வு இல்லை.

தனியார் மருத்துவமனைகளில் டாக்டர்கள் வேலைக்கு செல்லமாட்டார்கள். அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் இன்று காலை 9.30 மணி முதல் 10.30 மணிவரை வேலைநிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள். இந்த மசோதாவை திரும்ப பெறக்கோரி இந்திய மருத்துவர்கள் சங்கம் தொடர்ந்து போராடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தனியார் ஆஸ்பத்திரிகள்

இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு கிளையின் மாநில தலைவர் (தேர்வு 2019) டாக்டர் சி.என்.ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் நடைபெறுவதாகவும், தமிழ்நாட்டை பொறுத்தவரை தனியார் ஆஸ்பத்திரிகளில் சுமார் 1 லட்சம் டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகவும், இதனால் தனியார் ஆஸ்பத்திரிகளில் புறநோயாளிகள் பிரிவு மூடப்படும் என்றும் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் உள்நோயாளிகள் பிரிவு மட்டுமே இயங்கும் என்றும் கூறி உள்ளார்.

Next Story