மும்பையில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு

மும்பையில் ஓ.என்.ஜி.சி. ஊழியர்கள் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில், பயணம் செய்த 4 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. #Mumbai | #ONGC
மும்பை,
மும்பையின் ஜூஹூ விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 10.20 மணியளவில் பவன் ஹன்ஸ் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் புறப்பட்டுச் சென்றது. அதில் ஓ.என்.ஜி.சி. ஊழியர்கள் 5 பேர் மற்றும் இரண்டு பைலட்டுகள் பயணம் செய்தனர். ஓ.என்.ஜி.சி.க்கு சொந்தமான எண்ணெய் கிணறுக்கு அந்த ஹெலிகாப்டர் புறப்பட்டுச் சென்றது. ஆனால், குறித்த நேரத்திற்குள் எண்ணெய்க் கிணறு உள்ள பகுதியில் தரையிறங்கவில்லை.
கடைசியாக 10.30 மணியளவில் கட்டுப்பாட்டு அலுவலகத்துடன் ஹெலிகாப்டர் தொடர்பில் இருந்துள்ளது. அதன்பின்னர் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டதால், கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ஹெலிகாப்டரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
கடலோர காவல்படையினர், அந்த ஹெலிகாப்டரின் பாகங்கள் கடல்பகுதியில் சிதறி கிடப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அப்பகுதியில் தீவிரமாக நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 4 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இன்னும் காணாமல் போன மற்ற 3 பேரின் நிலை என்னவென்று தெரியாததால் அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடற்படையினரும் உஷார் படுத்தப்பட்டு தீவிர தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். #Mumbai | #ONGC
Related Tags :
Next Story