பிரதமரின் செயலாளரை சந்திக்க தலைமை நீதிபதி மறுத்தாரா?


பிரதமரின் செயலாளரை சந்திக்க தலைமை நீதிபதி மறுத்தாரா?
x
தினத்தந்தி 14 Jan 2018 5:00 AM IST (Updated: 14 Jan 2018 1:43 AM IST)
t-max-icont-min-icon

பிரதமரின் செயலாளரை சந்திக்க தலைமை நீதிபதி மறுத்தாரா? புதிய பரபரப்பு.

புதுடெல்லி,

டெல்லியில் சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பற்றி மூத்த நீதிபதிகள் ஜே.செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் நேற்று முன்தினம் பத்திரிகையாளர்களை சந்தித்து பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறினர்.

இதுவரை இல்லாத ஒரு நிகழ்வாக இது அமைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக மத்திய சட்டமந்திரி ரவிசங்கர் பிரசாத்தை அழைத்து அவசர ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில் பிரதமர் மோடியின் முதன்மை செயலாளர் நிருபேந்திர மிஸ்ரா, டெல்லியில் எண்.5, கிருஷ்ணமேனன் மார்க்கில் உள்ள தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் அதிகாரபூர்வ இல்லத்துக்கு நேற்று காலை சுமார் 9½ மணிக்கு காரில் சென்றார். ஆனால் வீட்டின் வாயிற்கதவு திறக்கப்படவில்லை. இதனால் சிறிது நேரம் காத்திருந்து பார்த்து விட்டு, அவர் அங்கிருந்து திரும்பி விட்டார். இது தொடர்பான காட்சிகளை டி.வி. சேனல்கள் காட்டின. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

பிரதமரின் முதன்மை செயலாளரை தலைமை நீதிபதி சந்திக்க மறுத்து விட்டதையே இது காட்டுவதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ரன்தீப் சுர்ஜிவாலா, டுவிட்டரில் வெளியிட்டு உள்ள பதிவில், “பிரதமரின் முதன்மை செயலாளர், தலைமை நீதிபதியின் வீட்டுக்கு சென்று உள்ளார். இப்படி சிறப்பு தூதரை அனுப்பியது ஏன் என்பது பற்றி பிரதமர் உடனே பதில் அளிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டு உள்ளார்.

Next Story