சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மோதலில் பார் கவுன்சில் சமரச முயற்சி


சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மோதலில் பார் கவுன்சில் சமரச முயற்சி
x
தினத்தந்தி 13 Jan 2018 11:45 PM GMT (Updated: 13 Jan 2018 8:39 PM GMT)

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மோதலில் சமரச முயற்சியில் பார் கவுன்சில் இறங்கி உள்ளது. இது தொடர்பாக 7 உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக மூத்த நீதிபதிகள் ஜே.செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி.லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.

டெல்லியில் நேற்று முன்தினம் இவர்கள் நால்வரும் நிருபர்களை சந்தித்தனர். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீதும், நிர்வாகம் மீதும் குற்றம் சாட்டினர்.

இந்த மோதல், இந்திய நீதித்துறை வரலாற்றில் முன் எப்போதும் நடந்திராத நிகழ்வு என்பதால் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இப்படி ஒரு நிகழ்வு நடந்திருக்கக்கூடாது என்ற கருத்தும் எழுந்து உள்ளது.

இந்த நிலையில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கும், அவருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ள நீதிபதிகளுக்கும் இடையே சமரசம் செய்து வைக்கும் முயற்சியில் இந்திய பார் கவுன்சில் இறங்கி உள்ளது.

இது தொடர்பாக 7 உறுப்பினர்கள் கொண்ட குழு ஒன்றை பார் கவுன்சில் அமைத்து உள்ளது.

இந்த தகவலை இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா, டெல்லியில் நேற்று நிருபர்களிடையே வெளியிட்டார். அப்போது அவர் கூறுகையில், “சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளை சந்தித்துப் பேசுவதற்காக 7 உறுப்பினர்கள் கொண்ட குழுவை அமைக்க நாங்கள் ஒருமனதாக முடிவு எடுத்து உள்ளோம். இந்த பிரச்சினை கூடிய விரைவில் தீர்க்கப்படவேண்டும் என்று விரும்புகிறோம்” என்று குறிப்பிட்டார்.

நீதித்துறையின் உள் விவகாரத்தில் அரசியல் தலைவர்கள் தலையிட மேற்கொள்ளும் முயற்சிக்கு மனன் குமார் மிஸ்ரா ஆட்சேபம் தெரிவித்தார். இதில் அவ்வாறு செய்யாமல் விலகி இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “இந்த விவகாரத்தை அரசியல் ஆக்க வேண்டாம் என்று அரசியல் கட்சி தலைவர்களை இந்திய பார் கவுன்சில் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். நீதித்துறையின் கண்ணியத்தை குலைத்து விடக்கூடாது. நீதித்துறையின் மீது மக்கள் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து உள்ளனர்” என்று கூறினார்.

சுப்ரீம் கோர்ட்டு வக்கீல்கள் சங்கமும் நேற்று கூடி இந்த பிரச்சினை குறித்து விவாதித்தது. இதில் 2 தீர்மானங்கள் நிறைவேற்றினர். அவற்றை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு அனுப்பி வைக்கின்றனர்.

அதில் ஒரு தீர்மானம், இந்த பிரச்சினையில் முழு அமர்வில் விரைவான தீர்வு காணப்பட வேண்டும் என்றும், இன்னொரு தீர்மானம் இந்த அமைப்பின் நம்பகத்தன்மையை மீட்டெடுக்கிற வகையில் பொது நல வழக்குகள், கொலிஜியத்தில் இடம்பெற்றுள்ள 5 நீதிபதிகளை தாண்டி சென்று விடாத படிக்கு பார்த்துக்கொள்ள வழிவகை செய்ய வேண்டும் என்றும் கூறுகிறது.

Next Story