நிர்மலா சீதாராமன் சுகோய் போர் விமானத்தில் பறந்தார் ‘45 நிமிட பயணம் அற்புதம்’ என பெருமிதம்


நிர்மலா சீதாராமன் சுகோய் போர் விமானத்தில் பறந்தார் ‘45 நிமிட பயணம் அற்புதம்’ என பெருமிதம்
x
தினத்தந்தி 18 Jan 2018 3:00 AM IST (Updated: 18 Jan 2018 2:53 AM IST)
t-max-icont-min-icon

ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் சுகோய் போர் விமானத்தில் பறந்தார். தனது 45 நிமிட போர் விமான பயணம் அற்புதமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜோத்பூர், 

ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் நகரில் உள்ள விமானப்படைத் தளத்துக்கு சென்று பார்வையிட்டார். அங்குள்ள அதிகாரிகளிடம் விமானப்படையின் செயல்பாடுகள் மற்றும் தயார் நிலை குறித்து விரிவாக கேட்டறிந்தார்.

அப்போது இந்திய விமானப் படையில் முன்னணி விமானமாக திகழும் சுகோய்-30 ரக போர் விமானத்தில் பறந்து பார்வையிடவேண்டும் என்கிற தனது விருப்பத்தையும் அவர் தெரிவித்தார். மணிக்கு அதிகபட்சமாக 2,100 கி.மீ வேகத்தில் பறக்கும் இந்த ரக விமானம் அணு ஆயுதங்களை சுமந்து சென்று எதிரியின் எல்லைக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தும் வலிமை கொண்டதும் ஆகும்.

அதிகாரி விளக்கினார்

ராணுவ மந்திரியின் விருப்பத்தை உடனடியாக செயல் படுத்தும் நடவடிக்கைகளில் விமானப்படை அதிகாரிகள் இறங்கினர். இதையடுத்து, அவரிடம் சுகோய் போர் விமானம் பற்றிய அனைத்து தகவல்களையும் விமானி விரிவாக விளக்கினார். 58 வயது நிர்மலா சீதாராமன் ஏற்கனவே சுகோய் போர் விமானத்தின் இயக்கம் மற்றும் விமானியின் அறை பற்றி அறிந்தவர் என்பதால் போர் விமான பயணம் குறித்து எளிதில் புரிந்து கொண்டார்.

இதைத்தொடர்ந்து சுகோய்-30 விமானத்தில் போர் விமானிகள் அணியும் சீருடையை அணிந்து கம்பீரத்துடன் விமானிக்கு பின்பக்கமாக சென்று அமர்ந்தார்.

அற்புத அனுபவம்

அதன்பிறகு அங்கிருந்து புறப்பட்ட அந்த போர் விமானம் மேற்கு ராஜஸ்தான் பகுதி வரை சென்று மீண்டும் ஜோத்பூருக்கு திரும்பியது. 45 நிமிட நேரம் அவர் அந்த விமானத்தில் பயணம் செய்தார்.

தனது, சுகோய்-30 போர் விமான அனுபவம் பற்றி நிர்மலா சீதாராமன் நிருபர்களிடம் கூறுகையில், “விமானத்தில் பறந்த 45 நிமிடமும் அற்புதமானது, மறக்க முடியாதது” என்று குறிப்பிட்டார்.

2-வது இந்தியப் பெண்

இதுபற்றி இந்திய விமானப்படை அதிகாரி ஒருவர் கூறுகையில், “சுகோய்-30 போர் விமானத்தில் 2-வதாக பயணம் செய்த இந்தியப் பெண் மற்றும் 2-வது ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் ஆவார். அவருக்கு முன்பாக 2009-ல் அப்போதைய ஜனாதிபதி பிரதீபா பட்டீல் இந்த ரக போர் விமானத்தில் பயணம் செய்து இருக்கிறார். அப்துல்காலம் ஜனாதிபதியாக இருந்தபோது சுகோய்-30 விமானத்தில் பயணம் மேற்கொண்டு உள்ளார். ஜார்ஜ் பெர்னாண்டஸ் சுகோய்-30 ரக போர் விமானத்தில் பறந்த முதல் ராணுவ மந்திரி ஆவார்” என்றார். 

Next Story