”பத்மாவத்” பட விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு வரவேற்புக்குரியது: கபில் சிபல்


”பத்மாவத்” பட விவகாரத்தில்  உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு வரவேற்புக்குரியது: கபில் சிபல்
x
தினத்தந்தி 18 Jan 2018 1:37 PM GMT (Updated: 18 Jan 2018 1:37 PM GMT)

”பத்மாவத்” பட விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு வரவேற்புக்குரியது என்று காங்கிரஸ் மூத்த தலைவரான கபில் சிபல் தெரிவித்துள்ளார். #Padmavat #SupremeCourt

புதுடெல்லி,

சர்ச்சைக்குரிய பத்மாவத் இந்தி திரைப்படம் பல தடைகளை கடந்து வருகிற 25-ந்தேதி திரைக்கு வருகிறது.  ஆனால், படத்தில் உள்ள சில காட்சிகள் ராஜ்புத் சமூகத்தினரிடையே எதிர்ப்பினை கிளப்பியுள்ளது. இதனால் ராஜஸ்தான், அரியானா, குஜராத் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பத்மாவத் படம் வெளியிட தடை விதிக்கப்பட்டு இருந்தது.  இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அந்த படத்தின் தயாரிப்பாளர்கள் மனு செய்தனர்.  படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி மனுவில் தெரிவித்திருந்தனர்.

இந்த படத்திற்கு பல்வேறு மாநில அரசுகளும் தடை விதித்த நிலையில் இவ்விவகாரத்தினை அவசரமுடன் விசாரிக்க வேண்டிய வழக்கு என கருதி அதனை விசாரணை மேற்கொள்ள சுப்ரீம் கோர்ட்டு  ஒப்புதல் அளித்தது. அதன்படி  இந்த மனு மீது சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் ஏ.எம். கன்வில்கர் மற்றும் டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் கொண்ட அமர்வு இன்று விசாரணை மேற்கொண்டது. அதில், பத்மாவத் திரைப்படத்துக்கு ராஜஸ்தான், மத்திய பிரதேசம், அரியானா, குஜராத் ஆகிய 4 மாநிலங்களில் விதிக்கப்பட்ட தடையை நீக்கி நீதிபதிகள் இன்று உத்தரவு பிறப்பித்தனர். இதனால் இத்திரைப்படம் நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் வருகிற 25-ந்தேதி வெளியிடப்பட உள்ளது.

பத்மாவத் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட் உத்தரவிற்கு, மூத்த வழக்கறிஞரும் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான கபில் சிபல் வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும், சுப்ரீம் கோர்ட் உத்தரவை மாநிலங்கள் மதிக்கும் என தான் நம்புவதாகவும் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.  #SupremeCourt  #CJI  #Justice  #Padmavat

Next Story