விண்ணில் தொலைந்தது கண்டுபிடிப்பு: ஜிசாட்-6ஏ செயற்கைகோளின் தகவல் தொடர்பை மீட்டெடுக்க முயற்சி

விண்ணில் தொலைந்து போன ஜிசாட்-6ஏ செயற்கைகோள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாகவும், அந்த செயற்கைகோளின் தகவல் தொடர்பை மீட்டெடுக்க முயற்சிகள் நடந்து வருவதாகவும் ‘இஸ்ரோ’ தலைவர் கே.சிவன் தெரிவித்தார்.
பி.எஸ்.எல்.வி. சி-41 ராக்கெட் மூலம் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-ஐ செயற்கைக்கோள் வெற்றிகரமாக நேற்று விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது குறித்து ‘இஸ்ரோ’ தலைவர் கே.சிவன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடல்சார் பாதுகாப்பை உறுதிபடுத்துவதோடு, ஜி.பி.எஸ். வசதிக்கு இணையான ‘நாவிக்’ வசதியை மேம்படுத்தும் வகையில் இந்த செயற்கைகோள் அனுப்பப்பட்டு இருக்கிறது. அதன்படி ‘நாவிக்’ தொழில்நுட்ப வசதியை கொண்டு மீனவர் நல மேம்பாடு, தொழில்துறை வளர்ச்சி, கல்வி நிறுவன கட்டமைப்பு போன்றவற்றில் பல வளர்ச்சியை எட்டலாம். இந்த வசதிகளை மக்களிடம் கொண்டு செல்லும் முக்கிய பொறுப்பு தொழில் நிறுவனங்களுக்கு உண்டு. அதற்கு அந்நிறுவனங்கள் முன்வர வேண்டும்.
மத்திய அரசின் அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீட்டு வரையறையின்படி இதுவரை ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். வகையில் 8 செயற்கைகோள்கள் ஏவப்பட்டு உள்ளன. அந்தவகையில் மீதமுள்ள ஒரு செயற்கைகோளையும் விண்ணில் நிலைநிறுத்த திட்டமிட்டு வருகிறோம். இந்த வகை செயற்கைகோள்கள் அதிநவீன வளர்ச்சி கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வருடம் முடிவதற்குள் ஜிசாட்-11 செயற்கைகோளை பிரெஞ்சு கயானாவில் உள்ள கொரு ஏவுதளத்தில் இருந்து ஏவ முடிவு செய்திருக்கிறோம். இந்த செயற்கோளை ஏந்தி செல்ல ஏரியன் 5-ஏ ராக்கெட் தயாரிக்கப்பட்டு வருகிறது. இது 5.7 டன் அளவு எடை கொண்டது. ‘இஸ்ரோ’ வரலாற்றிலேயே அதிக எடையுடன் தயாரிக்கப்படும் ராக்கெட் இதுதான்.
மேலும் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-2 ராக்கெட் தயாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் ஜிசாட்-29, ஜிசாட்-2ஏ செயற்கைக்கோள்கள் அடுத்தடுத்து விண்ணுக்கு அனுப்பப்பட உள்ளன. அதிகம் எதிர்பார்க்கப்படும் சந்திரயான்-2 செயற்கைகோளும் விண்ணுக்கு சென்று பணியை மேற்கொள்ள இருக்கிறது. சந்திரயான்-2 செயற்கைகோள் நிலாவை சுற்றிவரும் வகையிலும், நிலாவில் தரையிறங்கி அங்கு (ரோலர் எந்திரம் மூலம்) பல திசைகளில் படங்களை பிடித்து கட்டுப்பாட்டு அறைக்கும் அனுப்பும் வகையிலும் நவீன தொழில்நுட்பங்களுடன் தயாராகி வருகிறது.
அடுத்த 2 வருடங்களில் 6 டன் எடைகொண்ட ஜி.எஸ்.எல்.வி. வகை ராக்கெட்டை அனுப்ப திட்டமிட்டு அதற்கான பணிகளில் இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே கடந்த மாதம் 29-ந்தேதி ஜி.எஸ்.எல்.வி. எப்-8 ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பப்பட்ட ஜிசாட்-6ஏ செயற்கைகோளின் தகவல் தொடர்பு பரிமாற்றத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டது. இதனால் தகவல் தொடர்பு முறிந்து அந்த செயற்கைகோள் எங்குள்ளது என்பதை கண்டறிய சிக்கல் ஏற்பட்டது. தற்போது அந்த செயற்கைகோள் எங்குள்ளது? என்று கண்டறியப்பட்டு உள்ளது. அதன் தகவல் தொடர்பை மீட்டெடுக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதேவேளையில் ‘இஸ்ரோ’ மூலம் மறுபயன்பாட்டு ராக்கெட் (ரீ-யூசுவல் ராக்கெட்) விட வாய்ப்புள்ளதா? என்று கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. மறுபயன்பாட்டு ராக்கெட் ஏவுதலுக்கான சோதனை முயற்சிகள் நடந்து வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது ‘இஸ்ரோ’ செயற்கைகோள் மைய இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை, ராக்கெட் ஏவுதள இயக்குனர் ஹட்டன், விக்ரம் சாராபாய் ஆராய்ச்சி மைய இயக்குனர் எஸ்.சோம்நாத், சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மைய இயக்குனர் பி.குனிகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story