உத்தரபிரதேச மாநிலத்தில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. மீதான கற்பழிப்பு புகாரில் திடீர் திருப்பம்: வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம்

உத்தரபிரதேச மாநிலத்தில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ மீதான கற்பழிப்பு புகாரில் திடீர் திருப்பமாய் வழக்கு சி.பி.ஐக்கு மாற்றப்பட்டுள்ளது.
லக்னோ,
பாரதீய ஜனதா கட்சி ஆட்சி நடக்கிற உத்தரபிரதேச மாநிலத்தில் 18 வயது பெண் ஒருவர் கும்பல் கற்பழிப்புக்கு ஆளானார். இது தொடர்பாக ஆளும் கட்சி எம்.எல்.ஏ., குல்தீப் சிங் செங்கார் உள்ளிட்டவர்கள் மீது கற்பழிப்பு வழக்கு போடப்பட்டு உள்ளது. அதைத் தொடர்ந்து பாதிப்புக்கு ஆளான பெண்ணின் தந்தை தாக்கப்பட்டு, உயிரிழந்தார். இதிலும் எம்.எல்.ஏ.யின் ஆதரவாளர்கள் மீது புகார் எழுந்து உள்ளது.
இந்த நிலையில் எம்.எல்.ஏ., குல்தீப் சிங் செங்கார் நேற்று முன்தினம் லக்னோவில் போலீசில் சரண் அடைய சென்றார். ஆனால் அவர் சரண் அடைய அனுமதிக்கப்படவில்லை.
இந்த சர்ச்சைக்கு உரிய வழக்கில் திடீர் திருப்பமாக, விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி விட மாநில அரசு முடிவு எடுத்து உள்ளது. இதைத் தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த எம்.எல்.ஏ., குல்தீப் சிங் செங்கார், “நான் தலைமறைவாகவில்லை. நான் லக்னோவில் தான் இருக்கிறேன். நான் என்ன செய்ய வேண்டும், சொல்லுங்கள்” என்று கூறினார்.
மேலும், “நான் அப்பாவி. கட்டுப்பாடான பா.ஜனதா தொண்டர். என்னை இந்த வழக்கில் தவறாக சிக்க வைத்து விட்டனர்” என கூறினார்.
குல்தீப் செங்காருக்கு ஆதரவாக நிருபர்களிடம் பேசிய மற்றொரு பா.ஜனதா எம்.எல்.ஏ.,வான சுரேந்திரசிங், “3 குழந்தைகளின் தாயை யாராவது கற்பழிப்பார்களா? குல்தீப் செங்காரை இந்த வழக்கில் தவறாக சேர்த்து விட்டனர்” என கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story