பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங்குக்கு 7 நாள் சிபிஐ காவல்

உத்தர பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங்கிற்கு 7 சிபிஐ காவலில் எடுக்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது. #UnnaoRapeCase
லக்னோ,
உத்தரபிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர், தனது உறவினருடன் கடந்த ஆண்டு ஜூன் 4-ந்தேதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வான குல்தீப் சிங் செங்காரின் வீட்டுக்கு சென்றார். வேலை கேட்டு சென்ற அந்த இளம்பெண்ணை குல்தீப் சிங் மற்றும் சிலர் சேர்ந்து கற்பழித்ததாக அந்த இளம்பெண் பின்னர் போலீசில் புகார் செய்தார்.அதன்பேரில் குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். எனினும் எம்.எல்.ஏ.வை அவர்கள் கைது செய்யவில்லை. ஆனால் அந்த இளம்பெண்ணின் தந்தை மீது ஆயுத தடுப்பு சட்டத்தின் கீழ் கடந்த 3-ந்தேதி வழக்கு பதிவு செய்த போலீசார் 5-ந்தேதி அவரை கைது செய்தனர்.
இதனால் விரக்தியடைந்த அந்த இளம்பெண், கடந்த 8-ந்தேதி முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தின் வீட்டுக்கு முன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். தீக்குளிக்க முயன்ற அவரை போலீசார் காப்பாற்றி விட்டனர்.இந்த சம்பவத்துக்கு மறுதினம், அவரது தந்தை போலீஸ் காவலில் மரணமடைந்தார். அவரது உடலில் பயங்கரமான காயங்கள் இருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டது.இந்த சம்பவங்களால் உத்தரபிரதேச அரசியலில் பரபரப்பு ஏற்பட்டிருந்த நிலையில், இந்த சம்பவத்தில் தலையிடுமாறு அலகாபாத் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த ஐகோர்ட்டு எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்காத மாநில அரசை கடுமையாக கண்டித்தது.
இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்துமாறு மாநில அரசு நேற்று முன்தினம் பரிந்துரைத்தது. இதை ஏற்றுக்கொண்ட மத்திய உள்துறை அமைச்சகம் உடனடியாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. அதன்படி 7 பேர் கொண்ட சி.பி.ஐ. அதிகாரிகள் குழு டெல்லியில் இருந்து நேற்று அதிகாலையில் லக்னோ வந்தனர்.அவர்கள் இந்திரா நகரில் உள்ள எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்காரின் வீட்டுக்கு சென்று அவரை கைது செய்தனர். இந்த நிலையில், கைது செய்யப்பட்ட பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங்கை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
Related Tags :
Next Story